முயல் கரடு

எதிரியிடமிருந்து தப்ப
பதுங்கிக் கிடப்பதுபோல் கிடந்த கரடு
குழந்தைகளின் குதூகலத்துக்காக
சவாரி செய்ய முதுகைக் காட்டியபடி
கிடக்கும்.
'கரட்டூர்' என பெயர்பெறக்
காரணமாயும் இருந்திருக்கலாம்.
ஊரின் எல்லையாகவும்,
ஊருக்கு அடையாளமாகவும்
விளங்கியிருக்கலாம்...
மழை, வெயில்
என பருவங்கள் மாறினாலும்,
'முயல் கரடு' தன அழகை
குறைத்துக் கொண்டதில்லை.
அதற்கென இருந்த கர்வத்தில்
கம்பீரமானது.
கரட்டை தாண்டிச் செல்ல முடியாத
மனிதர்களும்,
கரட்டை தாண்டிப் பறக்க முடியாத
பறவைகளும் உண்டு.
பால்ய நினைவுகள் கிளற
கரட்டூர் நோக்கி நினைவுகள் துரத்தும்...
கருநீல புகைபோல் படர்ந்து கிடக்கும்
சாலையில் நீந்திச் செல்ல...
ஓயாத வெடிச் சத்தமும், சம்மட்டி ஒலிகளும்
திசை சொல்லும்.
லாரியின் டயரில் சிக்கிய நாயாய்
வயிறு பிதுங்கிக் கிடந்தது.
மரங்களும், பறவைகளும்
வளை தேடும் எலிகளும்,
தப்பியோடிய முயல்களும், பூச்சிகளும்
இனி திரும்பாது...
கொம்புக்காக தும்பிக்கையிழந்த யானை ஒன்று
வீழ்ந்து கிடந்தது...!
மனிதர்களையும், மரங்களையும்
சுமக்கும் வாகனங்களின் பேரிரைச்சல்...
காலம் தின்று செரித்த வேளையில்
சாலையெங்கும் படிந்திருக்கிறது
விசும்பலாய் முயல் கரடு...
- கவிஞர். வதிலைபிரபா, வத்தலக்குண்டு.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.