அந்த வீடு!

மழையோடும் வெயிலோடும்
போராடக் கற்றுத்தந்த கூரையது;
உழைத்து உழைத்து வந்த பணத்தில்
பெருமையோடு வாழ்ந்த வாழ்க்கையது,
வறுமையிலும் சிரிப்போடு வாழ்ந்த நாட்களை
பழையக்கஞ்சோடு பருகிய காலமது;
மாமனும் அத்தையும் பேசி சிரித்ததையெல்லாம்
கதையோடு முடிந்துக்கொண்ட ஓலைகளின் கூடு அது,
கனவுகளைப்பற்றி யெல்லாம் கவலையில்லா
மனிதர்களின் மனதுள் வாழ்ந்த வீடு அது;
இன்றைய லட்சியக் கனவினை – அன்றுவெறும்
கோபுரங்களுள் விட்டுச்சென்ற சிற்பிகளின் சாலையது...
ஏருழுது மரம்வெட்டி வீடு வைத்த வியர்வையில் கூட
பாட்டுகளை நனைத்துக் கட்டிய ஒய்யாரப் பொழுது அது;
விடிவெள்ளி நிலவுகாட்டி மடியிலுறங்கும் குழந்தைக்கு
தாய் நம்பிக்கையையும் சேர்த்தூட்டிய வளர்ப்பு அது,
மரணமென்றால் கூடியழ தளர்ந்து விழுந்தால்
தாங்கிப்பிடிக்க உறவுகள் சேர்ந்திருந்த மாளிகையது;
மழைவந்தால் வீடொழுக, வீடொழுவ தாயழுக
தாயோடுப் பிள்ளைகளும் சொந்தமும் கூடியழுத வேளையது,
சோறாக்கி சொக்குபொடி சேர்த்துருட்டி செல்வியவ கொடுத்ததுல
அச்சோ அச்சச்சோ'வென மனஞ் செவந்த நாட்களது;
சொத்தெல்லாம் சொந்தமாக, சொத்தெல்லாம் வீடாக
சொத்தெல்லாம் அன்பென்றே வாழ்ந்த ஈரமனக்கூடு அது;
சிம்னி விளக்குதுடைத்து சன்ன ஒளியேற்றி
மின்னும் பொன்னெழுத்தாய், மரபுசொல்லும்
ஆத்திச்சூடியையும் கண்ணன் வாய்ப்பாடையும்
மாறி மாறி மனனம் செய்தப் பருவமது,
சாணி மெழுகி செம்மண் பூசி, கட்டாந்தரையும்
பூசியச் சுவரும் மழையிலூறிப் போனாலும்'
மனதில் தீரம்தீரா மனிதர்களின்
பிழைப்பு நடந்தச் சாட்சியது,
இனி காலம் மாறி, கட்டிடம் ஏறி
வாழ்வு எதுவாக ஆனாலும்; நினைவில் நீங்கா அதுவாகவே
அமர்ந்திருக்கும் அழியாக் கூடு அது; நம்
அறிவொழுகிய வீடு அது!!
- வித்யாசாகர்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.