பழையன வேண்டாம்...!
வாருங்கள் தமிழ்புரிக்குச் செல்வோம்!
வேருங்கள் சுய அறிவால்
சேருங்கள் தீந்தமிழ் வரிகள்.
எங்கும் வெளியிடாத ஓவியம்
எங்கும் பாடாத பாடல்
எங்கும் ஆடாத நடனம்
எங்கும் எழுதாத வரிகள்
எங்கும் தேவையாம் கொடுங்கள்!
தொல்காப்பியம் தண்டியலங்காரம் புலமைப்
பல் நூல்கள் புரட்டுங்கள்!
வல்லமையாய்ப் புதிதாய் வார்த்திடுங்கள்.
கல்லுதல் செய்தே வரைந்தவைகள்
எல்லாம் பழையன என்றால்
கொல்லையில் வீசுவதா சொல்லுங்கள்!
வள்ளுவன் பாரதியின் பழையவைகள்
ஊரதிரத் தேரோடுது பாருங்கள்!
மல்லாட்டம் தமிழோடு போடுங்கள்!
கல்லாதாரும் கற்றவரும் விளங்க
வில்லவனாகிக் காதலையும் வரையுங்கள்.
வில்லங்கமின்றிக் கவி இலக்கணம்
நல்லங்கமாக்கி நெஞ்சக் கிண்ணத்தால்
துல்லியமாய் வெல்லமாய் ஊற்றுங்கள்!
எல்லோரும் மேதை என்பார்கள்!
சொல்வளம் பஞ்சமற்ற புலவராகுங்கள்!
(கல்லுதல்- தோண்டுதல். வில்லவன் - மன்மதன்)
- வேதா. இலங்காதிலகம், ஓகுஸ், டென்மார்க்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.