தகாத உறவு
கள்ளக்காதல்
அடுத்த வீட்டு மனைவி ஓட்டம்
கணவன் பிடிபட்டான்
அசிங்கமான நம்
அடையாளம்...
காதல் என்பது
அன்பென்று மட்டும் அறியப்படுகையில்
காமம் என்பது
அங்கங்கே
அதுவாக மட்டும் இருந்துக கொள்ளும்...
உடம்பிற்கு
வாசனைதிரவியம் பூசிக்கொள்ளும் அறிவு
அதைச் சோற்றில்
போட்டுக்கொள்ளாத அறிவு
காதலையும் உரிய இடத்தில்
காட்டிக்கொள்ள வளர்தலே உயர்வு...
கண்ணியமும்
பண்பும்
உயர்ந்து நிற்கையில்
காதல் கரைபடுவதில்லை...
காதல் கசந்திடாத மனது
அதைக் கண்டவரிடத்தில்
காட்டிக்கொள்வதில்லை...
காதல் கொள்வது
மனதும் மனதும் கொள்வது
உடலும் உடலும் தொடுவதல்ல
விருப்பட்டவரிடத்திலெல்லாம்
கடைவிரிப்பதல்ல,
விரும்பியவரிடம் கண்களால் பேசி
உரியவரிடத்தில் மட்டும்
உயிரோடு பேசுகிறது காதல்...
விரும்புவதையெல்லாம்
அடைவது காதலல்ல
பேராசை
விரும்பினாலும்
அளவோடிருக்கும் அன்புதான்
காதல்...
காதல் பிசகல்ல
பிசகிக் காதலிப்பது பிசகு...!
- வித்யாசாகர்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.