முகமூடி
அழகிய முகத்திற்கு முகமூடியேன்?
பழகிய முகங்களை ஏமாற்றுவதேன்!
அழகாய்ப் புனையும் புனை பெயரும்
நிழலாய்ச் சுயம் மறைக்கும் முகமூடி!
பொங்கி வழியும் அன்பு மொழியும்
தங்க முலாம் பூசிய புன்னகையும்
தனித்துவ உண்மை மனிதம் மறைக்க
தடையாகும் சிலநேர முகமூடி தான்.
மௌன மொழியையும் ஒரு நேரத்தில்
யௌவன முகமூடியாக்குகிறான் மனிதன்.
திருடனுக்கும் பெரும் உதவி செய்யும்
அரும் பெரும் சொத்து முகமூடி.
கலைப் பின்னலுடை தங்கம், வெள்ளி
வலைத் துணியால் முகம் மூடி
இலையாலே கண்ணிமை மறைப்பதாய் மணவறைக்கு
சிலையாக நடப்பாள் புது மணமகள்.
அக்கறையோடு ஒரு சமயத்தினரிடும் முகமூடி
சிக்கல் இணைப்பாய் மேற்குலகக் கலாச்சாரத்தில்
எக்கச்சக்க முரண்பாட்டு விவாதங்கள் கிளப்புகிறது.
பக்க விளைவாய்ச் சமூகநிலைகளும் வழுக்குகிறது.
கலைவேலை, கைவேலையென பிள்ளைகள்
காகிதக்கூழில் சுய முகமூடி செய்து
கண்கவர் வர்ணமிட்டு அலங்கரித்து
களித்து விளையாடுவார் - கண்ணாமூச்சி ஆடுவார்.
நல்லவராய் முகமூடி போட்டு நாட்டில்
நயவஞ்சகம் செய்வோர் பலர் உளர்.
முகம் மூடி தன்னை மறைப்பது
அகம் மூடும் அவல நிலை தானோ!
- வேதா. இலங்காதிலகம், ஓகுஸ், டென்மார்க்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.