மழைச் சுவடுகள்...

இரவுப் பாடல்களின்
இனிமையைப் போலவே
பகலில் பெய்யும் மழையும்
மனதுள்மூளும் நெருப்பின் குளிர்ச்சிதான்...
சின்னதாகக் கையில் குத்திய
தடுப்பூசியின் பெரிய வட்டத்தைப் போலவே
மனதுள் பெரிதுபெரிதாக இருக்கிறது அந்தச்
சின்னச் சின்ன மழையின் நினைவுகளும்...
நினைவுகளை உதிர்க்கும் தனிமையின்
அழுத்தம்பறக்கும் புழுதியோடுதான்
காம்பருந்து விழுகிறது பழுக்காத இலைகளும்
பூக்காத மலர்களும்...
வானம்பார்த்த பூமிக்கு
மூத்த பங்காளிகள் நாங்கள்
எங்களுக்கு மழை என்பது கண்ணீரைவிடக் குறைவு
கவலையென்பது மழையில்லா வானத்தினும் பெரிது...
சில இடத்தில் குழிகள்தேடி
நிறைகிறது ஆசைவெள்ளம்
சில இடத்தில் ஆசைக்கு கொஞ்சம் பெய்கிறது
அன்புமழை; சுடுகிறது முத்தக் காற்று...
பாவமந்த மழையில்லாது வாடும்
பயிரைப் போன்ற பெற்றோர்களும்,
தொலைதூரத்துப் பிள்ளைகளும்,
அருகிலிருந்தும் எரியாத உறவு விளக்கும்...
வானம்பார்த்த பூமிக்கு மூத்தப்பங்காளிகள்
நாங்கள், எங்களுக்கு மழை என்பது
கண்ணீரைவிடக் குறைவு; கவலையென்பது
மழையில்லா வானத்தினும் பெரிது...
மலர்களைத் தொடும் மழைக்குத் தெரிகிறது
அதன் அடிவயிற்றுத் தாய்மை;
மலடி யெனும் புதுச்சொல்லை கழுவிதான்
கலைகிறது மழைச் சுவடு...
மழை’ வெறும் நீரல்ல, நினைவல்ல
ஈரம் மட்டுமல்ல
உயிர்; உயிர்மறையின் சப்தத்தில்
உள்ளிருக்கும் மௌனம் மழை!!
- வித்யாசாகர்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.