கீறல்கள்... கிறுக்கல்கள்...
ஆதிமனிதன் கீறல்களும் என்றோ
அறிவு வீதீயில் நிரூபணம்.
சோதி மழலையின் கீறலும்
போதி தருகின்ற பாதையே.
உன்னத அறிவின் முகிழ்வே
மண்ணில் குழந்தையின் கீறல்கள்.
வெண் கட்டியாலே கோடுகள்.
கரிக்கட்டி கொண்டு கிறுக்கல்கள்.
முன்னேற்ற நரம்பு இயக்கம்
தன்னார்வ நிதான அபிவிருத்தி
கன்னாபின்னா கிறுக்கல் முடிவு.
பின்னிய கிறுக்கல்கள் நேராகும்.
பன்மை வரைவுகள் சீராகும்.
கீறல், கிறுக்கல் தேறலாகும்.
மீறல்களால் எழுவது சீறல்கள்.
சீறல்களின் மனப்படிமம் கீறல்கள.
ஈரமண்ணில் நண்டின் கீறல்
சாரமிகு கற்பனைத் தூறல்.
பாரநெஞ்சின் வேதனைக் கீறல்;
பாரிய தாக்கத்தின் திருப்புமுனை.
நேரிய காதலின் கீறல்கள்
பூரண கவிதைக் கிறுக்கல்கள்.
சீரிய கவிமனக் கீறல்கள்
வீர தீரக் கவிக் கிறுக்கல்கள்.
உதட்டுக் கீறல்களில் வழிந்து
உருகும் அன்பின் கிறுக்கல்
உன்னத விரியல் முத்தம்.
கண்களின் மன்மதக் கீறலால்
காதல் கிறுக்குப் பிடிக்கும்.
கிறுக்கல்கள் நவீன ஓவியமாகும்.
விதையின் கீறல்களால் விருட்சம்.
கீறல்கள், கிறுக்கல்களுக்கும் அர்த்தமுண்டு.
- வேதா. இலங்காதிலகம், ஓகுஸ், டென்மார்க்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.