உறவுச் சைகை ஒளி!
உயிரேந்தும் கலசமாம் எம்
உடல் சிகரத்தின் உன்னதமான
உறவுச் சைகை ஒளி,
உயிர்க்கின்ற மென்னகை புன்னகை.
உருவில் ஆணோ, பெண்ணோ
உறவாடும் ஆப்பிள் உதட்டில்
உயிர்க்கும் உணர்வு மென்னகை
உல்லாசத்தின் பச்சை ஒளி.
மனித முகத்துக் கண்களிலும்
மலர்ந்து விரியும் மென்னகை.
மனம் நிறைந்த காதல்
மதிமுக தரிசனத்திலும் மின்னும்.
அல்லி மலரும் மென்னகையாய்
ஆதவனுக்காயிதழ் மலரும் நகை
சதையின் இறுக்கம் இளக்க
சத்தான உயிர்த்தேன் மென்னகை.
கரும் போர்வைப் பூமகளிற்குக்
கவ்யாண நிலவொளி மென்னகை.
கடமை, கருமம் எழுவீரெனக்
கருதும் சூரியச்சுடர்ப் பொன்னகை.
கடிதான உலக வாழ்வில்
கரும்பான இளமை மென்னகை.
கடும் பகையறுக்கும் நற்
காரியமாக்கும் மந்திரம் புன்னகை.
தீபமான 'அன்புள்ள சிநேகிதியே' ன்
தினம் வார இறுதியிலும்
தீபச்சுடராக மறுபடி விரிவது
தீம்தனன தினதோம்...தீம்...
தித்திக்கும் பரிசு புன்னகை...
திறமைக் களமாய் நீ
தில்லானா ஆடுவாய் வாழ்க!
திரையுள்ளாகாது வாரஇறுதியிலும் ஒளிர்க!
- வேதா. இலங்காதிலகம், ஓகுஸ், டென்மார்க்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.