இப்படியும் அழுகிறது மனசு...!
நண்பர்கள்தான்
நெற்றியில் அடிக்கவில்லை
ஆனால் அடிக்கிறார்கள்;
உறவுகள் தான்
அன்பில் குறையொன்றுமில்லை
ஆயினும் கொல்கிறார்கள்;
பிள்ளைகள்தான்
விட்டுப் பிரிவதெல்லாமில்லை
ஆயினும் இடைவெளி கொள்கிறார்கள்;
உடன் பிறந்தவர்கள் தான்
ஒரே ரத்தம் தான்
ஆயினும் எல்லாம் வேறு வேறு;
அப்பா அம்மா தான்
பெற்றவர்கள்தான்
முழுதாய் புரிவதேயில்லை;
வீடு பொருள் அத்தனையும்
அப்படித்தான்
இருப்பதாகவே தெரிகிறது; ஆனால்
அத்தனையுமே இல்லை,
எல்லோருக்கும்
எல்லாமாக சுயம் இருக்கிறது
எனக்கும் தான்; எனக்குமிருக்கிறது சுயம்
இதோ அந்த சுயத்தைக் கொல்கிறேன்
கொஞ்சம் கொஞ்சமாய்க் கொல்கிறேன்
கொன்று என் சுயம் மண்ணில் சாய்கையில்
யாரும் எனக்காக அழுதுவிடாதீர்கள்...!
- வித்யாசாகர்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.