மரம் போல வாழலாமே...!
உண்ணக் கனி கொடுக்கும்
உறங்க நிழல் கொடுக்கும்!
இலைகளும் பூக்களும்
மருந்தாய் விருந்தளிக்கும்!
மழையை வருவிக்கும்!
மண்ணைக் குளிர்விக்கும்!
அறுத்துப் போட்டால்
கதவாய் நிலையாய்க்
காவல் செய்யும்!
காற்றினிடத்துலுங் கூட
மாசினைக் களைந்திடும்!
பாடும் பறவைகட்கும் - வாழும்
கூடாய் விளங்கிடும்!
கிளைகள் வெட்டினால்
விறகாகும்!
எரிந்த சாம்பல் கூட
உரமாகும்!
மனிதனே...
உன்னால் என்ன பயன்?
உன் பெற்றோர்,
உன் மனைவி மக்களாவது
உன்னால் முழுப்பயன்
பெற்றதுண்டா...?
உன்னையே நீ எண்ணிப்பார்
உன் வாழ்க்கையை
மரத்திடமிருந்து தொடங்கு!
தன்னினத்தைத் தானே
அழித்துக் கொள்ளாத
தங்களுக்குள்
சாதிகள் பார்த்துச்
சண்டையிட்டுக் கொள்ளாத
மரம் போல் வாழப் பழகு!
இருக்கும் வரை எல்லோருக்கும்
பயனுடையவனாய்...
இறந்த பின்னும் உன்
எண்ணங்கள் செயல் மூலம்
எல்லோருக்கும் பயன் கொடுப்பவனாய்...
வாழ்ந்திட முயற்சிக்கலாமே...!
- புலவர் ச. ந. இளங்குமரன், நாகலாபுரம், தேனி மாவட்டம்..

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.