எங்களுக்கு வேண்டாம்!

உச்சநீதிமன்றம் உத்தரவால்
காலம் கடந்து
காவிரி பாய்ந்தது!
கருநாடகத்தில் பெருக்கெடுத்தது
கன்னடர்களின் வன்முறை!
அடித்து நொருக்கப்பட்டன
தமிழரின் உடலும் உடைமையும் !
தமிழ்நாட்டில் வாழ்ந்துவரும்
கன்னடருக்கு எந்தவொரு
சிறுதீங்கும் இழைக்காத
பெருமை தமிழனுக்கு...!
தமிழ்நாட்டு வயல்வெளிகள்
கருகும் போதெல்லாம்
காவிரி நீரோடு கலந்து
ஓடிவருவது கன்னடம் வாழ்
தமிழர்களின் குருதியும்தான்...
வயல்வெளிகளைச்
சகதியாக்க நினைத்து
சொந்த மண்ணில்
அகதியாகிப் போனவன்
தமிழன்...
வந்தவரை வாழவைத்து
சென்ற இடங்களில்
சீரழிந்து நிற்பவன்
இந்தத் தமிழன்...!
காவிரி, பாலாறு,
முல்லைப் பெரியாறு ,
பரம்பிக்குளம் ஆழியாறு
என எல்லா ஆறுகளும்
பக்கத்து மாநிலங்களால்
பலவந்தமாய் முடக்கப்படுகின்றன!
பாலைவனப் பாதைக்குப்
பயணிக்கும் தமிழ்நாட்டில்
கடந்த சில வருடங்களில்
காணாமல் போன
கண்மாய்கள் மட்டும்
நூற்றுக்கும் மேல்...!
வைகை அணைக்குப் பின்
வேறெந்தப் பெரிய அணையும்
தண்ணீரைத் தேக்கத்
தமிழ்நாட்டில் கட்டப்படவில்லை!
எந்த அணைத் தண்ணீரும்
எங்களுக்கு வேண்டாம்!
எவரோடும் எங்களுக்குச்
சண்டைகள் வேண்டாம்!
ஓடும் நதிகளை எல்லாம்
ஒன்றாக்கி விடுங்கள்!
புதிய அணைகளைக் கட்டித்
தண்ணீரைத் தேக்கிடுங்கள்!
அது போதும்... எங்களுக்கு!
- புலவர் ச. ந. இளங்குமரன், நாகலாபுரம், தேனி மாவட்டம்..

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.