நீ கொடுத்த சேவைக்கு என்றும் அழிவில்லை
தாயின்றி வாழ்வோர்க்கும் தாயான அம்மா
தலைமீது கல்லாக உன் பிரிவு அம்மா
துயரத்தைச் சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை
இந்நேரம் கண்ணீர்க்கு நான் தத்துப் பிள்ளை
சிங்கம் போல் வாழ்ந்தவளே உம் புகழே ஓங்கும்
உன் அன்பு முகம் எப்படி நெஞ்சைவிட்டு நீங்கும்
இதயம்தான் செயலிலழந்து துடித்திங்கு ஏங்கும்
உன்பிரிவை எம் மனது எப்படித்தான் தாங்கும்?
கல்விக்கு கரம்தந்து உரமானாய் அம்மா
கட்சிக்குள் நீ சேர்ந்து வரமானாய் அம்மா
சிறியோர்க்கும் பெரியோர்க்கும் நீதானே அம்மா
சிறகிழந்த பறவைபோல் ஆனோமே அம்மா
பழிச் சொல்லை பல போது நீ கேட்டபோதும்
சிரிப்பாலே கடந்தாயே வீரமான மாது
இது என்ன நடந்ததென்று இன்னும் தெளிவில்லை
நீ கொடுத்த சேவைக்கு என்றும் அழிவில்லை
சிலநாட்கள் நீயின்றி கடந்துவிட்ட போதும்
கணம்தோறும் உன் நினைவு நெஞ்சமதில் வாழும்
இனி நீயும் இல்லையென்று எண்ணம் வரும்போதும்
புழுபோன்று துடித்திங்கு நெஞ்சமது வாடும்
- தியத்தலாவ எச். எப். ரிஸ்னா, இலங்கை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.