வடக்கு வளர தெற்கை தேய்க்காதீர்...!

எங்கள் முகத்தில் சாயம் பூசாதீர்கள் !
நிஜ முகங்களின் அடையாளத்தை
தொலைக்க உங்களிடம் வழி கேட்கவில்லை !
கடைக்கோடி மக்கள் நாங்கள்
கடைத்தேறும் வழி காட்டுங்கள் !
மரபணு மாற்றிய விதை அறிமுகத்தால் ...
மண் சார்ந்த மரபுப் பயிர்களைத் தொலைத்தோம் !
அன்று வானூர்தி வழி விதைத்த
சீமைக் கருவேல விதைகளால்...
நிலத்தடி நீர் துறந்தோம் !
புதியp பொருளாதார மண்டலங்கள்
விழுங்கிய விளைநிலங்களோ பல்லாயிரம் ஏக்கர்கள் !
அணுமின் நிலையத்தால்
நெய்தல் நிலமக்கள் நொந்து நூலானார்கள் !
மீதேன் திட்டமது கைவிட்ட நிலையில்
இன்று ஹைட்ரோ கார்பன் திட்டம்...
தஞ்சை புதுக்கோட்டை நஞ்சைக் கழனிகளை
நஞ்சு விளையும் பூமியாக்கும் நலன்கெட்ட திட்டமதை
விட்டொழிப்பீர் தடையின்றி !
கங்கையைக் காவிரியுடன் இணைக்கும் திட்டமதை
எங்கு தொலைத்தீர் ? ஏன் இந்த ஏமாற்று வித்தை ?
நெல் விளைந்து நானிலத்தை தலைநிமிரச் செய்திட்ட
உழவுத் தொழிலுக்கு உலை வைப்பதேன் ?
சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் என்பதை மறந்தீரோ ?
வடக்கு வளர தெற்கை தேய்க்காதீர்....!
வடக்கும் வளரட்டும் தெற்கும் தழைக்கட்டும்....!
காடழித்து யோகநிலை வேண்டுமெனில்
வீடெரித்துக் குளிர் காய செல்லுங்கள் !
நிலமழித்துக் கார்பன் வேண்டுமெனில்
மக்கள் குலமழித்து வெற்றிக்கொடி நாட்டுங்கள் !
- கா. ந. கல்யாணசுந்தரம், சென்னை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.