அந்த ஆன்மாவின் அரவணைப்போடு!

மெல்ல மெல்ல மறையும்
மாலைநேரத்துச் சூரியனிடம்
என் மனது தன்னை இழந்தது !
தழுவிக்கொள்ளும் இருளின் அடர்த்திக்குள்
இனம்புரியாத அச்சம் என்னுள் எழுந்ததது !
தலைகீழாய்த் தொங்கும் வௌவால்கள்
இப்போது இரு வீட்டின் எல்லைகளுக்குள்
ஒரு கிரிக்கெட் வீரனைப் போல்
ஓட்டம் எடுத்துக் கொண்டிருந்தன !
என் வீட்டு இராந்தல் விளக்கில்
முட்டி மோதும் விட்டில் பூச்சிகள்
தனது இறகுகளைத்
தொலைத்துக் கொண்டிருந்தன!
பக்கத்தில் துணிப்பைக்குள்
பதுங்கியிருக்கும் புத்தகங்களை
படிக்க வெளியில் எடுக்கும் போது...
முதலில் வந்த ஆங்கிலப் புத்தகத்தை
வெறுப்புடன் பார்த்த எனது பார்வையில்
கட்டபொம்மனின் வெறி இருந்ததது!
தமிழ்ப் புத்தகம் அதிகம் புரட்டிப் படித்ததால்
மூலைகள் மடிந்து கிழிந்த நிலையில் இருந்தது!
பாரதியாரின் பாஞ்சாலி சபதத்தை
உரக்கப் படிக்கும்போதெல்லாம்...
என் அம்மாவின் செவிகள் என்னிடமிருக்கும்!
“எரிதழல் கொண்டுவா...
கதிரை வைத்திழந்தான் அண்ணன்
கையை எரித்திடுவோம் “ என உணர்வோடு
சொல்லும் போது நான் வீமனாய் மாறிடுவேன் !
குரல் கிழியப் படித்து உடலை வருத்தாதே
எனச் சொல்லும் அம்மாவின்
பரிவில் ஒரு ரசிப்புத்தன்மை
இருக்கத்தான் செய்தது...!
ஆம்... இன்றளவும் காற்றில் கரைந்த
அந்த ஆன்மாவின் அரவணைப்போடு!!
- கா. ந. கல்யாணசுந்தரம், சென்னை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.