இலக்கற்ற பயணங்கள்...!
விளக்கொளியில் மறைந்திருக்கும்
மையிருட்டில் பொலிவிழந்த
முகங்களின்
அடையாளங்கள் நிலைத்திருக்கும் !
தெளிவற்ற சிந்தனைக்குள்
செயல்பாட்டின் விரல்கள் எல்லாம்
முடங்கியிருக்கும் !
ஒன்று கூடிப் பேசினாலும்
முடிவற்ற சூழலுக்குள்
பொய்மையும் புறங்கூறலும்
மண்டிக்கிடக்கும் !
இலக்கற்ற பயணங்களில்
எண்ணற்ற பாதைகளின்
குறுக்கீடுகளின் ஆளுமை
குவிந்திருக்கும் !
வண்ணமற்ற ஓவியத்தில்
எண்ணமதை ஈர்க்காத கிறுக்கலின்
வெளிப்பாடுகள் ஒளிந்திருக்கும் !
புனரமைத்திடா புராதான
சான்றுகளில் கலாச்சார
படிமங்கள் பொதிந்திருக்கும் !
வடித்துவைத்த சிலைக்குள்
சிற்பியின் கைவண்ணம்
எழிலோடு பரிமளிக்கும் !
பேசும் மொழிகளுக்குள்
பிழையில்ல சொற்களோடு
இலக்கணமும் பிறப்பெடுக்கும் !
மண்சார்ந்த கலாச்சாரம்
தொலைத்துவிட்ட வாழ்வுதனில்
தரமற்ற உருக்குலைந்த
திட்டங்கள் துரத்திவரும் !
- கா. ந. கல்யாணசுந்தரம், சென்னை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.