ஆண்டுதோறும் சுதந்திர தினம்!

இன்னும் முழுமையாய்
சுதந்திரத்தை சுவாசிக்கவில்லை !
பொருளாதார முன்னேற்ற வாயிலில்
ஆளுமைகளின் அணிவகுப்புதான்
நடந்துகொண்டிருக்கிறது !
கோட்டையில் சமாதானப் புறாக்களை
பறக்கவிட்டால் போதுமா ?
வெண்மை இங்கே கருப்பு வண்ணத்தில்
காலமெல்லாம் தீட்டப்பட்டு ... ...
வறுமையின் கோலம் அம்மணமாய்
காட்சிப்படுத்தப்படுகிறது !
பாதுகாப்பு வளையத்துக்குள்
இருந்துகொண்டு இந்தியா தன்னிறைவு
நாடென எப்படிப் பிரகடனம் செய்கிறீர்கள் ?
அம்மணமாய் விவசாயப் பிரதிநிதிகளை
நாடாளுமன்ற வளாகத்தில் ஓடவிட்டு
வேடிக்கைப் பார்த்தவர்கள் அல்லவா நீங்கள் !
கல்விக் கொள்கையில் குளறுபடி செய்து
கதிகலங்கச் செய்தீர்கள் மருத்துவச் சேர்க்கையை !
காவிரி நதிநீர்க் கொள்கை மேலாண்மை வாரியத்தால்
காணாமல் போனது.... தமிழகமே தரிசு நிலமாச்சு !
இராசாயனத் தொழிற்சாலைகளை இறக்குமதிசெய்து
மரபு சார்ந்த தமிழ் மண்ணைச் செயலிழக்கச் செய்வதேன் ?
ஆண்டுக்கு ஆண்டு வருகிறது சுதந்திர தினம்...!
ஆம்... பாதுகாப்பின்றி கொண்டாடுகிறோம் !
இன்றைய இனிப்பு சுற்றியக் காகிதத்தில்
பிரதிபலிக்கிறது...
விவசாய மக்களின் மனக்குமுறல்கள்...!
வாழிய செந்தமிழ்...!
வாழிய பாரத மணித்திருநாடு !
- கா. ந. கல்யாணசுந்தரம், சென்னை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.