எம் நாடு என்றுரைப்போம்! ! !!
அக்னி ஆயுதங்களின்றி ஆர்ப்பரித்து
அமைதி வழியில்
பெற்ற விடுதலை எமது!
உலகம் காணாத கருவறைக் குழந்தையும்
சிறை சென்று பெற்றுத்
தந்த விடுதலை எமது!
அச்சமில்லை அச்சமில்லை எனக் கூவி
ஆங்கிலேயனை விரட்டிப்
பெற்ற விடுதலை எமது!
ஆண் பெண் பேதமின்றி
பாரமின்றி போராடிப்
பெற்ற விடுதலை எமது!
மூவர்ணக்கொடியுடன் முழக்கமிட்டு
மூச்சுள்ள வரை போராடிப்
பெற்ற விடுதலை எமது!
வேற்றுமையில் ஒற்றுமை கண்டு
நெஞ்சில் ஏந்திய தோட்டாக்களை
விதைத்துப் பெற்ற விடுதலை எமது!
பேச்சிலும் மூச்சிலும்
கலையிலும் கவிதையிலும்
தேசியக்கொடியைப் பறக்கவிட்டுப்
பெற்ற விடுதலை எமது!
பல்லாயிரம் உயிர்களைப்
பறிகொடுத்தும் பின்வாங்காது
பெற்ற விடுதலை எமது!
உயிருக்குப் பயமின்றி
உண்மைக்குப் புறம்பின்றிப்
பெற்ற விடுதலை எமது!
பிறவா உயிரும்
பிஞ்சு கண்களும் கண்ட கனவு
பிறந்த
விடுதலைத் திருநாள், இன்று
தோட்டா துளைத்த இடங்கள்
பூ பூக்க கரங்களிலே ஏந்தி
தேசியக்கொடியினைப் போற்றித்
தூவுவோம்!
வந்தே மாதரம் என்றுரைத்த
குரல்கள் இசையாகத்
தேசியகீதம் பாடுவோம்!
சிந்திய ரத்தத்துளிகள்
அமுதமாகப் பருகி
இது எம் நாடு என்றுரைப்போம்! ! !
- நாகநந்தினி, பெரியகுளம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.