சீற்றம்

கொல்லும் எமனாய் வானவெளி
துன்ப மழையைப் பொழிந்ததம்மா
சேர்த்து வைத்த சொத்தெல்லாம்
பார்த்திருக்க அழிந்ததம்மா!
வெள்ளம் என்ற சொல் கேட்டு
உள்ளம் தீயாய் எரிந்ததம்மா
கனவில் பூக்கும் தோட்டத்தில்
கல்லறை மட்டும் தெரிந்ததம்மா!
கூரை வரையும் நீர் வந்து
பதறச் செய்து வதைத்ததம்மா
ஓடி ஒழிய வழிகளின்றி
பின்னால் வந்து உதைத்ததம்மா!
தண்ணீர் சீற்றம் கொண்டெழுந்து
பாதி ஊரை துடைத்ததம்மா
தப்பிச் செல்ல வழியின்றி
பாதை யாவையும் அடைத்ததம்மா!
சேதங்கள் வந்து அழிக்கையிலும்
திருடர்கள் தொல்லை நிறைந்ததம்மா
யாரும் இல்லா வீட்டிலுள்ள
பொருட்கள் மாயமாய் மறைந்ததம்மா!
மலைகள் பெயர்ந்து இடம்மாறி
மண்சரிவாகி நின்றதம்மா
கதறக் கூட வழியின்றி
கழுத்தைப் பிடித்துக் கொன்றதம்மா!
விலை மதிப்பிலா உயிரெல்லாம்
வீழ்ந்து மடிந்து இறந்ததம்மா
சீறும் இயற்கையைக் கண்டவுடன்
பேரும் புகழும் மறந்ததம்மா!
குழந்தை குமரு கிழடு என
எல்லோர் உயிரையும் பிடித்ததம்மா
வெறிகள் கொண்ட வேங்கைபோல்
குரல்வளை கடித்துக் குடித்ததம்மா!
கருமிகள் போல வாழ்ந்தோரை
இயற்கை வந்து அடித்ததம்மா
இவற்றைப் பார்த்து மற்றோர்கள்
திருந்தும் வழியைக் கொடுத்ததம்மா!
கஷ்டப்பட்டு உழைத்ததெல்லாம்
கண்முன்;னாலே சிதைத்ததம்மா
இறைவன் அருளே மேலென்ற
எண்ணம் மனதில் விதைத்ததம்மா!!!
- தியத்தலாவ எச். எப். ரிஸ்னா, இலங்கை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.