சுமைதாங்கி
அம்மா!
நான் உச்சரித்த
முதல் வார்த்தை!
என் உணர்வோடு கலந்த
உயிர் வார்த்தை!
ஈரைந்து மாதங்கள் எனை
கருவில் சுமந்தவளும் நீதான்!
இருபத்தேழு ஆண்டுகள் எனை
இதயத்தில் சுமந்தவளும் நீதான்!
பசியறிந்து பாலூட்டியவளும்
நீதான்!
ருசியறிந்து உணவு ஊட்டியவளும்
நீதான்!
கண்ணுறங்கா வேளையினில் உடன்
விழித்தவளும் நீதான்!
கண்கலங்கிய நேரங்களில் கண்ணீரைத்
துடைத்தவளும் நீதான்!
நோயில் வீழ்ந்தபோது தோளில்
சுமந்தவளும் நீதான்!
தோல்வியில் துவண்டபோது
இதயத்தில் தாங்கியவளும் நீதான்!
ஆசானாய் அறிவூட்டியவளும்
நீதான்!
தோழியாய்த் துணைவந்தவளும்
நீதான்!
இறைபக்தி விதை ஊன்றியவளும்
நீதான்!
இறைவனிடம் வழி நடத்தியவளும்
நீதான்!
எத்தனையோ உறவுகள் என்
வாழ்வில் வந்து சென்றாலும்
என் கவிக்கு உன்னைச்
சிந்திக்கக் காரணம்...
நீ மட்டும் தானம்மா
சுகம்தேடா...
சுமைதாங்கி!
- அ. சுகந்தி அன்னத்தாய், சென்னை- 48.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.