சும்மாடு வேண்டுமென்று...!
தலை மேல் பாரத்துடன் வருகிறாள்
தலைச் சுமையைப் பாரம் என்றுதான் சொல்வாள்.
எதிர்ப்படுவோரிடம்
'பாரத்தை இறக்கி வையுங்களேன்'
என்று கேட்கத் தவறியதில்லை.
அவளுக்கு தலை பாரம் மட்டுமல்ல
உடம்பே பாரம்தான்.
'வக்கத்தவ வசதியானவனுக்கு வாக்கப்பட்டா
பாரம் சுமந்துதானே ஆகணும்'
மூக்கைச் சிந்தினாள்.
இறக்கிய பாரத்தை ஏத்தவும் முடியாம
ஏத்துன பாரத்தை இறக்கவும் முடியாம
வருகிற அவளிடம் யாரேனும்
பாரத்தை இறக்கி வைக்கிறேன் என்று சொல்லி விடாதீர்கள்...
தலைச்சுமையோடு உடல் சுமையையும்
தூக்கிச் சுமக்க
ஒரு "சும்மாடு" வேண்டுமென
காத்திருக்கிறாள் அவள்.
- கவிஞர். வதிலைபிரபா, வத்தலக்குண்டு.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.