விடியல்

'இரவில் வாங்கினோம் சுதந்திரம்
இன்னும் விடியவே இல்லை'என்று
பெற்ற சுதந்திரத்தைப்
பேணிக் காத்திடாமல்
வெற்று கோஷங்களில்
விடியலைத் தேடும் நண்பா!
பூனைக் கண்களை மூடிக்கொண்டால்
பூலோகம் இருண்டதாகி விடாது!
இமை மூடிய உன்
விழிகளுக்குள்தான்
சிறையாய் விடியல்!
மூடி உயர்த்திப் போராடும்
உன் கைகளுக்குள்தான்
அடிமையாய் விடியல்!
வெற்றுக் கோஷமிடும் உன்
உதடுகளுக்குள்தான்
மௌனமாய் விடியல்!
ஆதலால் நண்பா!
தூங்கியது போதும்
துயிலெழு!
கீழ்வானில் உதித்தெழும்
சூரியனின் செங்கதிர்களைப் பார்!
சூழ்ந்து நிற்கும் இருள் அனைத்தையும்
வீழ்த்தித் தள்ளிவிட்டு விரைந்தெழும்
அவ்விண்ணின் விடியல்
இரவுக்கு மட்டுமல்ல...
மண்ணில் உன்
வரவுக்கும்தான்!
இருளை விரட்டும் வரைதான்
உலகில் வெளிச்சம் தூ...ர...ம் !
உன்னை உணரும் வரைதான்
உன்னில் விடியல் தூ...ர...ம்!
விடியலே நீயென்றால்...
தூரமும் துணையாகும்!
வெற்றியும் உனதாகும்!
ஆதலால் நண்பா!
தூங்கியது போதும் துயிலெழு!
வீழ்ந்தது போதும் விழித்தெழு!
உந்தன் எழுச்சி
இருளை விரட்டிடும்
விடியலாய் மட்டுமல்ல...
அறியாமையை அகற்றும்
அகல்விளக்காய்....!
அடிமைத்தனத்தைச்
சுட்டெரிக்கும். அக்கினியாய்!
கலவரத்தை ஒடுக்கும்
காலனாய்...!
ஊழலை ஒழிக்கும்
உலைக்கலனாய்... !
விஷமிகளைக் அழிக்கும்
விஷமாய்....!
சிறைப்பட்டக் கனவுகளை
நனவாக்கும்
விடியலாய்....!
இன்றே மாற
விழித்தெழு!
நண்பா...
விழித்தெழு!
தூரமும் துணையாகும்!
வெற்றியும் உனதாகும்!
- அ. சுகந்தி அன்னத்தாய், சென்னை- 48.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.