இறவா நட்பு
அன்னையின் மடியில் தவழ்ந்த போது
எனக்கு முதலில் அறிமுகமானாய்!
ஆசான் வகுப்பில் பகிர்ந்த போது
மனதில் மிகுந்த நெருக்கமானாய்!
கல்லூரி நாட்களைக் கடந்த போது
கை கோரத்து எந்தன் கனவானாய்!
கடவுளைக் காண எத்தனித்த போது
அறிந்த நீயும் துணையானாய்!
ஆங்கிலம் எனை மிரட்டிய போது
அகலாது எந்தன் அருகிலிருந்தாய்!
அனைவரும் இகழ்வாய்ப் பேசிய போது
அனைத்தும் எனக்கு நீயானாய்!
இன்பங்களை உன்னுடன் பகிர்ந்த போது
ஈடில்லா மகிழ்ச்சி நீ தந்தாய்!
துன்பக்கடலில் நான் உழன்ற போது
பற்றுக் கோடாய் நீ இருந்தாய்!
சோகங்களை மனதில் சுமந்த போது
நம்பிக்கைக் கவிதை நீ தந்தாய்!
வறண்ட பாதையைக் கடக்கும் போது
தாகந்தீர்க்கும் அமிழ்தமானாய்!
தடுமாறி மேடையில் தவித்த போது
நாவில் வந்து நடம்புரிந்தாய்!
தலைநிமிர்ந்து உந்தன் புகழைத்
தரணிக்குரைக்க வாய்ப்பளித்தாய்!
பிறந்தது முதல் உனைநான் சுவாசித்ததால்
நீயே எந்தன் மூச்சானாய்!
தொடர்ந்து உனை நான் நேசித்ததால்
நீயே எந்தன் பிழைப்பானாய்!
மூத்தகுடியில் நீ முன்னுதித்ததால்
யாவர்க்கும் நீயே மூத்தவளானாய்!_ ஆயினும்
இளமைக்குன்றா இறவாத் தமிழே
இறுதிவரை நீயே எந்தன் நட்பாவாய்!
- அ. சுகந்தி அன்னத்தாய், சென்னை- 48.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.