இனி அவனுக்கு மரணமில்லை...
ஒரு பூவை உதிர்க்கிற மாதிரி
மரணம் உதிர்த்துவிட்டுச் செல்கிறது.
வழியெங்கும் பூக்கள்
பெரும் வரவேற்பு தருகின்றன
மரணத்தின் வாசனையோடு.
ஒரு பட்டத்து ராஜாவென மிடுக்குடன் செல்கிறவனுக்கு
இந்தப் பூக்களே மாலை.
மரணத்தை முடிசூடிக் கொள்கிறவனின்
தலைப்பாகையிலும் ஒரு பூ.
தானாக உதிரும் பூக்கள் எப்பவும் கரிசனம் மிகுந்தவை.
தன் வாசனையிழந்து அவன் மார்பில் தழுவும்போது
அவன் வாசனையை பரிசுத்தமாக ஏற்றுக் கொள்கின்றன.
இந்தப் பூக்கள் கடவுளைப் பிரசவிப்பவை.
மரணமிலாப் பெருவாழ்வு பூக்களால்தான் கிடைக்கும்...
ஆரவாரம் மிகுந்த இறுதி யாத்திரையில்
மரணத்தை உதிர்க்கிற மாதிரி
பூக்களை உதிர்க்கிறார்கள்.
யாத்திரையின் இறுதியில் உதிரும்
கடைசிப் பூவோடு
அவன் மரணமும் உதிர்கிறது;
இனி அவனுக்கு மரணமில்லை.
- கவிஞர். வதிலைபிரபா, வத்தலக்குண்டு.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.