செம்மொழித் தமிழ்

மலரும் பூக்கள் எல்லாம்
மணம் வீசுவதில்லை!
மணம் வீசும் பூக்களெல்லாம்
மாலைகள் ஆவதில்லை.!
மாலையாகும் பூக்களெல்லாம்
மங்கலம் ஆவதில்லை...!
மங்கலமாகும் பூக்களெல்லாம்
பூஜைக்கு ஏற்பதில்லை...!
அதுபோல்...
தோன்றிய மொழிகளெல்லாம்
வழக்கில் இல்லை!
வழக்கிலுள்ள மொழிகளுக்கெல்லாம்
வரிவடிவம் இல்லை!
வரிவடிவ மொழிகளுக்கெல்லாம்
இலக்கண இலக்கியங்கள் இல்லை!
இலக்கியங்கள் எழுந்த மொழிகளுக்கெல்லாம்
செம்மொழி அந்தஸ்தில்லை!
கல்தோன்றி மண்தோன்றா
காலத்தே முன்னுதித்தத் தீந்தமிழே!
உந்தன் சிறப்புகள்தான் என்னே...!
வரி ஒலி என இருவடிவம் நீ பெற்றாய்!
சிதைவுறா அவ்வடிவங்களால் சிறப்புற்றாய்!
வற்றாத செழுந்தமிழாய்
வளர்ந்து நின்றாய்!
வையமெங்கும் தமிழரின் உயிரானாய்!
அகப்புறப் பாகுபாட்டை வகுத்துரைத்த
இலக்கணமும் உனக்குண்டு!
அகப்புற வாழ்வைச் சிறப்பிக்கும்
சங்க இலக்கியம் பதினெட்டுண்டு!
அறநெறியைக் காட்டிடும்
அற இலக்கியம் உனக்குண்டு!
அருள்நெறியைக் காட்டிடும்
பக்தி இலக்கியமும் தானுண்டு!!
அழகூட்டும் அணிகலனாய்க்
காப்பியங்கள் ஐந்துண்டு!
அறிவூட்டும் கருவூலமாய்
சிற்றிலக்கியங்கள் தானுண்டு!
பழமை மாறா பண்புகொண்ட
மரபுக்கவிதை உனக்குண்டு!
புதுமையைப் போற்றிடும்
புதுக்கவிதையும் தானுண்டு!
கற்பனையாய்க் கட்டுரைக்கும்
புனைக்கதைகள் உனக்குண்டு!
இணையதளம் எடுத்துரைக்கும்
சாதனைகளும் தானுண்டு!
இத்தகைய
உந்தன் பெருமையை உரைத்தோரெல்லாம்
உலகம் போற்றும் மனிதரானார்!
சிறுமைப்படுத்த நினைத்தோரெல்லாம்
சிதறியோடும் எத்தனானார்!
- அ. சுகந்தி அன்னத்தாய், சென்னை- 48.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.