ஆசான்
கல்வியெனும் கடலில்
கரைசேர உதவிடும்
கலங்கரை விளக்கு ஆசான்!
அறிவொளி வீசச் செய்து
அறியாமையை அகற்றிடும்
அகல்விளக்கு ஆசான்!
சு(சூ)ழலில் சிக்கிடாமல்
பத்திரமாய்ப் பயணிக்க
உதவிடும் தோணி ஆசான்!
நம்பியோரை மேலேற்றி
தன்னிலை மாறா
நின்றிடும் ஏணி ஆசான்!
தடம் மாறிச் செல்வோரை
தன்மையாய் நன்னெறிப்படுத்திடும்
வெண்ணிலவு ஆசான்!
தடுமாறிடும் நேரங்களில்
தாங்கிப் பிடித்திடும்
ஊன்றுகோல் ஆசான்!
கல்லாய்க் கிடந்திடாமல்
கற்சிற்பமாய்ச் செதுக்கிடும்
கருணை உளி ஆசான்!
படிகக் கரிமமாய்ப் படிந்திருக்கும்
திறமைகளை வைரமாய்ப்
பட்டைதீட்டிடும்
உலைக்கலன் ஆசான்!
எண்ணச் சிதறல்களை
வண்ண ஓவியமாக்கிடும்
வண்ணத் தூரிகை ஆசான்!
எனை ஆசானாய் உருவாக்கி
காலங்கள் பல கடந்தும்
இக்கவிக்குக் கருவாகி
நிற்போரும் ஆசான்!
- அ. சுகந்தி அன்னத்தாய், சென்னை- 48.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.