அடையாளம்

சாலையின் இருமங்கும் கூடாரமாய்
வரிசை கட்டி நிற்கும் புளியமரம்!
பயணிகளின் நிழற்குடையாய்ப்
பரந்து நிற்கும் வேப்பமரம்!
ஊருக்குக் கிழக்கே தனித்து நிற்கும்
ஒற்றைப் பனைமரம்!
குளத்தங்கரையில் விழுதுகளுடன்
விரிந்து நிற்கும் ஆலமரம்!
வடக்கெல்லையில் பாலுடையாருக்குத்
துணையாய் நிற்கும் அரசமரம்!
கிணற்றுப் பாசனத்தால் செழித்து
வளர்ந்து நிற்கும் தென்னைமரங்கள்!
ஊருக்கு அடையாளமாய் நின்ற
மரங்களின் நினைவுகளை
நெஞ்சில் சுமந்தவளாய்...
நெருங்கிய சொந்தங்களிடமும்
பழகிய பந்தங்களிடமும்
விடைபெற்று பட்டணம் போனேன்...!
பத்தாண்டுகள் கழித்து
பழைய அடையாளங்கள்
பதிந்த நினைவுகளோடு
ஊர் திரும்பி வந்தேன்!
சொந்தங்கள் நலம் விசாரிக்க
பந்தங்கள் மாறாதிருக்க
ஊர்மட்டும் உருமாறிப் போச்சு...
உள்ளமும் வெந்துருகிப் போச்சு!
எங்கே என் ஊர் அடையாளம்!?
சாலை விரிவாக்கத்தால்
சாய்ந்து போயிருந்தன
புளிய மரங்கள்!
நிழற்குடை அமைக்க வேண்டி
வேரோடுப் பிடுங்கப்பட்டிருந்தன
வேப்ப மரங்கள்!
சமுதாயக்கூடம் கட்டி
அடியோடு அழிக்கப்பட்டிருந்தது
அரச மரம்!
குளக்கரையை அகலப்படுத்த
வீழ்த்தப்பட்டிருந்தன
ஆல விழுதுகள்!
வற்றிப்போன கிணறுகளால்
வாழ்விழந்திருந்தன தென்னைமரங்கள்!
கம்பும் சோளமும்
கதிர்விட்ட இடங்களெல்லாம்
காலிமனைகளாகவும்
கான்கிரீட் வீடுகளாகவும்
காட்சி தருகின்றன!
ஐயகோ...
இதுவா என் ஊர் அடையாளம்!?
புத்தம்புது உறவுகளாலும்
புத்தம்புது வரவுகளாலும்
புதிய தலைமுறைகளைக்
கண்ட மனித இனம் ...
அழிந்(த்)த மரங்களுக்கு
இணையாய் மரங்களைநட
மறந்தது ஏன்?
- அ. சுகந்தி அன்னத்தாய், சென்னை- 48.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.