காந்தி ஏந்திய ஆயுதம்
சத்தியமெனும் வாள் ஏந்தி
பொய்மைகளை வீழ்த்தியவர்!
உண்ணா நோன்பெனும் பொறி ஏந்தி
மக்களை அணி திரட்டியவர்!
ஒத்துழையாமையெனும் கவண் ஏந்தி
வெள்ளையனைக் கலங்கடித்தவர்!
சட்டமறுப்பெனும் துப்பாக்கி ஏந்தி
ஆங்கிலேயேர் சட்டங்களைச் சிதறடித்தவர்!
தண்டி யாத்திரையெனும் வில்லேந்தி
உப்பு வரியை அகற்றியவர்!
சுதேசி இயக்கமெனும் தீப்பந்தம் ஏந்தி
ஏகாதிபத்தியத்தைச் சுட்டெரித்தவர்!
கை இராட்டினம் எனும் ராக்கெட் ஏந்தி
அந்தியத் துணிகளைத் துரத்தியவர்!
அகிம்சையெனும் ஏவுகணை ஏந்தி
அண்டங்களைக் கலக்கியவர்!
நேசமென்னும் பீரங்கி ஏந்தி
தேசப்பிதா ஆனவர்!
மன்னிப்பெனும் கவசம் ஏந்தி
மகாத்மாவாய் உயர்ந்தவர்!
நாமும் அன்பெனும் ஆயுதம் ஏந்தி
நாளும் அறவழியில் நடந்திடுவோம்!
- அ. சுகந்தி அன்னத்தாய், சென்னை- 48.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.