அக்கினியாய் விழித்தெழு!
பெற்ற ஞானத்தைப்
பயன்படுத்தாமல்
உற்ற வயதில்
உழைத்திடாமல்
வெற்றுக் கனவுகளில்
வீணாய் நாட்களைக்
கழிக்கும் நண்பா!
ஏவுகணை நாயகனாய்
ஏற்றம் பெற்ற
உத்தமரின் உதயம் காண்!
உறுதியான நெஞ்சம் கொள்!
அன்று கலாம் 'கனவு
காண'ச் சொன்னது
காலமெல்லாம்
இன்பம் காண அல்ல!
மண்ணில் உதித்த
உன் பிறப்பால்
சரித்திரத்தில்
நிரந்தரக் கால் பதிக்க!
இமை மூடிய விழிகளுக்குள்
சிறைபட்ட கனவுகள்
தானாய் நனவாகிடாது!
அதனால்தான்-
விண்ணில் சிறகடிக்கும்
பறவைகளாய் விரைந்தெழவே
'அக்னிச் சிறகு' தந்தார்
அப்துல் கலாம்!
அந்த
உத்தமரின் உதயம் கண்டு
அக்கினியாய் விழித்தெழு!
அகிலம் போற்ற விரைந்தெழு!
- அ. சுகந்தி அன்னத்தாய், சென்னை- 48.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.