ஒரு ரோஜாமலர் போதும்!
கடல் அலை பேரிரைச்சல்
என்று அடிக்கடி சொல்வாய்
ஆனால் மனவமைதிக்கு நம்மை
கடற்கரை மணல் அழைக்கிறது
*****
சொற்களஞ்சியத்தில் நானோ
ஒரு சிட்டுக்குருவி
விதை சொற்களோடு கைகுலுக்க
எனது சிறகுகள் போதவில்லை
*****
புத்தனுக்குப் பேராசை காட்டி
அழைத்த போதி மரம்
இலையுதிர்த்து தனது துறவில்
ஞானம் பெற்றது
*****
காதலில் இல்லை என்ற
சொல்லுக்கு இடமில்லை
ஒரு ரோஜாமலர் போதும்
ஓராயிரம் கதை சொல்லும்
*****
காகிதம் பொறுக்கும் சிறுவன்
மிதித்ததில்லை பள்ளியின் படிகளை
பாதுகாத்த சுற்றுச்சூழல் அவனுக்கு
கொடுக்குமா வாழ்வியல் சூழல்?
*****
புத்தகங்களின் ஏடுகள்
பறந்தபடி இருக்கின்றன
பார்க்கும் உனது கண்களில்
பாவையாய் நானிருப்பதேன்?
- கா. ந. கல்யாணசுந்தரம், சென்னை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.