கணம்தோறும் வியப்புகள்

காலத்தின் ஓட்டத்தில்
கணம்தோறும் வியப்புக்கள்
உயிர்க்கொல்லி ஊடுருவல்
உலகிற்கு அச்சுறுத்தல்...
பள்ளி செல்லாமலே
பாடம் படிக்கும் மாணவர்கள்
அலுவலகம் செல்லாமலே
அசத்தும் உழைப்பாளிகள்...
விடிதலுக்கும் அடைதலுக்கும்
வித்தியாசம் தெரியா நாட்கள்
வீட்டில் முகம் பார்த்துப்பேசும்
விந்தையான நிகழ்வுகள்...
அக்கம் பக்கம் ஆள் இருப்பதையும்
அறிந்து கொள்ளச் செய்த அதிசயம்
ஆபத்து காலத்தில் எவர் வருவாரென
அழகாய்ப் புரிய வைத்த கோலம்...
தேவையின்றிச் சேர்த்த குப்பைகள்
தேடலைத் தடுக்கும் தடைக்கற்கள்
பாகுபாடின்றி சகலரையும் தண்டித்த
பாவத்தின் கணிசமான பலன்கள்...
இயற்கையை அழித்த மானுடர்க்கு
இறைவன் அளித்த சாபக்கேடு
கனக்கும் இதயக்குமுறல் சொல்லும்
கடந்திட்ட கொடுமைகள் பலவும்...
தன்னை முன்னிறுத்தவே
தன் சுய நலத்திற்காய்
தகாதனவே செய்யும்
தரம் கெட்ட மனிதர்கள் பலர்...
தனக்கில்லை எனினும் பிறர் வாழ
தனை இழப்பார் வெகு சிலர்
புதைக்கப்பட்ட கலைகள் பல
புதுப்பிக்கப்பட்ட அதிசயம் இன்று...
மருத்துவமனைத் தேவையில்லா
மகத்தான புரிதல்கள்...
விருப்பமில்லை எனினும்
விற்கப்பட்ட வியாபார யுக்திகள்...
மனிதர்கள் செய்த தவறனைத்தும்
மனக்கண் முன் நடமிடக் கண்டோம்
அனாவசிய ஆடம்பரங்களின்
அலட்டல்கள் புரியக் கண்டோம்..!!
- அன்புடன் ஆனந்தி, மிச்சிகன், வட அமெரிக்கா.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.