தமிழைக் காப்போம்...

தமிழர் நாட்டில் தமிழர் மொழியாம்
தமிழைக் காக்கத் தன்னலம் துறந்து!
தாழ்ந்து பணிந்து தகவுடன் கெஞ்சி
வீழுந்து வணங்கி வேண்டுவன் யானே!
செவிமடுப் பீரே செந்தமிழ் மக்காள்!
புவிதனில் மூத்த பொற்புடைக் கன்னி!
ஆருயிர் வளர்க்கும் அமுதெனும் மருந்து!
யாருயர் வினுக்கும் அடிப்படைக் கால்கோள்!
காற்றில் மிதந்து, கருவில் கலந்து,
ஊற்றாய்ப் பெருகி, ஒலியாய் மொழியாய்!
ஊனாய் உயிராய் உண்மைப் பொருளாய்!
வானாய் மண்ணாய் வழிபடு இறையாய்!
புதுப்புது மொழிகள் புதுக்கிய முதலாய்!
புத்தேள் உலகம் போற்றும் புகழாய்!
புத்துல கெங்கும் புதுப்புதுச் சொற்கள்!
நித்தமும் தந்து நிறைவை அருளும் !
சித்தனும் ஞானச் செருக்குடன் திகழ!
சித்தத் துள்ளே சிறந்து விளங்கும்!
அன்னைத் தமிழாள்! அழகு மொழியாள்!
முன்னை உலகம் முழுதும் ஆண்டநம்!
அன்னையின் பெருமை அறிய மறந்தோம்!
கண்களைக் கைகளால் குத்தி மகிழ்ந்தோம்!
அரியணை இல்லை! ஆட்சியும் இல்லை!
உரிய இடத்தில் உயர்தமிழ் இல்லை!
அறிவியல் கல்வி மருத்துவம் மற்றும்
பொறியியல் துறையிலும் பொற்றமிழ் இல்லை!
உரிய முறையில் உரிமை கேட்டால் !
பிரிவினை விதைப்பதாய்ப் பித்தர்கள் சொல்ல!
பொல்லா மனத்தர் பொய்களை நம்பி
எல்லாம் தொலைத்தோம்,
ஏதிலி யானோம்!
தமிழா உனக்குத் தமிழ்தான் முகவரி
தமிழா உனக்குத் தமிழே உயர்நெறி!
தமிழ்மொழி அழிந்திடின் தமிழா உன்னினம்!
அமிழ்ந்தே அழிந்திடும் என்பதைப் பகைவர்!
சரியாய் உணர்ந்து சவக்குழி தோண்டி !
நரியின் செயல்தனை நடைமுறைப் படுத்திட!
உண்மை யறியா திருத்தல் முறையோ?
தன்னினம் அழிக்கத் துணைபோ வாயோ?
எண்ணிப் பாரடா எழில்மிகு செல்வா !
மண்ணில் உன்புகழ் மலைபோல் நிலைத்திட!
தமிழா உன்னைக் காத்திட
தமிழ்மொழி தனைநீ காத்திடு வாயே...!
- புலவர் ச. ந. இளங்குமரன், நாகலாபுரம், தேனி மாவட்டம்..

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.