குழந்தைகளைக் கொண்டாடுவோம்!

இறைவனின் அம்சமாய் விளங்கும்
குழந்தைகள்
ஜாதி மத பேதமின்றி உலகமே வணங்கும்
குல தெய்வங்கள் !
குடும்பத்தின் வம்சம்
தழைத்தோங்கச் செய்திட
இறைவன் வரமாய் அளித்த
இளம் வாழைக் கன்றுகள்!
சில நேரங்களில் பெரியவர்கள்
குழந்தைகளின் முன்மாதிரி!
பலநேரங்களில் குழந்தைகள்
பெரியவர்களுக்கு முன்மாதிரி!
ஆம்...
விழுந்து எழுந்தாலும்
விடாமுயற்சியால்
தோற்பதில்லை
குழந்தைகள் !
கள்ளம் கபடற்ற
வெள்ளை மனதால்
வீண் கலக்கங்கள் கொள்வதில்லை
குழந்தைகள்!
சண்டைகள் வந்தாலும்
சடுதியில் மறந்து
சமாதானம் ஆகிவிடும்
குழந்தைகள்!
அடித்தாலும் பிடித்தாலும்
உடன்பிறப்புகளுக்குள்
ஒற்றுமை குறைவதில்லை
குழந்தைகளுக்குள்!
பண்டங்களைப் பிரிக்கும்போது,
கூடக் குறைய வந்தாலும்
மனதில் விரிசல்கள் விழுவதில்லை
குழந்தைகளுக்கு!
விவகாரம் சூடுபிடித்தால்
விட்டுக் கொடுத்து
விலகிக் கொள்ளும்
குழந்தைகள்!
போட்டிகள் வந்தாலும்
பொறாமைகள் எழுவதில்லை
குழந்தைகளுக்கு !
உடன்ஓடுபவன் விழுந்துவிட்டால்
போகட்டும் என ஓடிடாமல்
நின்று தூக்கி விடும்
குழந்தைகள்!
இத்தகையத் தெய்வீகக் குணத்தால்
குன்றேறி நிற்கும்
குழந்தைகளைக் கொண்டாடுவோம்!
தேவையான இடங்களில் நாமும்
குழந்தைகளாய் மாறிடுவோம்!
- அ. சுகந்தி அன்னத்தாய், சென்னை- 48.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.