கூடுகள்...
அடர் மரம் தாண்டி
தரை தீண்டிய ஒளிக்கீற்றை
கூடுகட்டும் குச்சிகளெனக் கொத்தித்
தோற்ற குருவிகள் - இன்று
குச்சிகளைத் தேடுவதில்லை
மரங்களைத் தேடுகின்றன...
ரோடுகளான காடுகளில்
மரங்களெல்லாம் வீடுகளாக - மிஞ்சுவது
சில போன்சாய் மரங்களே...
மரந்தேடிய பறவைகளுக்கு மனிதம்
தந்த கருணைப் பரிசு
செயற்கைக் கூடுகள்...
பறவைகளோ அக்கூடுகளை மரங்களாக்கி
உள்ளே மீண்டும் வீடுகளை உருவாக்க...
உறை (ரை)ப்பது ஒன்றுதான்.
"காடுகளை விட்டு வையுங்கள்
கூடுகளை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்..."
- பா. ஏகரசி தினேஷ், திருச்சி.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.