ஒரு மிடறு இரவு
சுவர்க் கடிகாரக் குருவி அலறி ஓய்ந்ததும்
முணகியபடி புரண்டு படுத்தவள்
கலைந்த கனவுகளைச் சேகரித்தபடி உறங்கினாள்.
புரளும் மஞ்சத்தில் சிதறிக் கிடந்த கனவுகளில்
மல்லிகைப் பூவின் வாசனை நாசி துளைக்க
கண்கள் செருகிக் கிடந்தாள்!
ஜன்னல் வழியேக் கசிந்த மார்கழிக் குளிர்
பூஞ்சையாய் அவள் மேனி படர,
ஏறி இறங்கும் மார்பெங்கும்
சில்லிடும் கனவுகள்
வெப்ப மூச்சுகளால் உருகி வழிகின்றன.
அறையெங்கும் சிதறிக் கிடந்த
கனவுத் திவளைகளால் அறை மேலும் சில்லிட,
மென் கரங்களால் போர்வையை இழுத்தபடி
முணகுகிறாள்!
உதடுகள் முணுமுணுக்க அவள் விரும்பியது
கனவுகளற்ற கோடை இரவு.
கனவின் வெறுமையில்
இலைகளற்ற மரமொன்றில் தஞ்சமடையும்
கொண்டைக் குயிலொன்றின்
ஏக்கக் கூவலில் ஏறி இறங்குகிறது
தொண்டைக்குழியில் ஒரு மிடறு இரவு.
- கவிஞர். வதிலைபிரபா, வத்தலக்குண்டு.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.