நாற்பது வயசு
நாற்பது கடந்தால்
வயதாகிவிட்டது என்கிறது
விளையாட்டு
இளவயது என்கிறது
அரசியல்.
நாற்பது கடந்தால்
வாலிபம் முடிந்துவிட்டது என்று
திருமணம்
வாலிபம் என்கிறது
ஊடகம்.
நாய்ப்பிழைப்பு என்கிறது
பழமொழி
அனுபவம்போதாது என்கிறது
முதுமை.
தகுதியில்லை என்கிறது
காதல்
மிகுதகுதி எனச் சாடுகிறது
மோதல்.
கட்டுப்பாடு தேவை என வற்புறுத்துகிறது
நாக்கு
அது தேவையில்லை என்கிறது
உடற்பயிற்சி
நாற்பது கடந்தால்
திட்டமிடல் அவசியம் என வாதிடுகிறது
வயது
திட்டமிடாமல் சண்டை செய்கிறது
மனது.
வாழ்க்கை தொடங்குகிறது
சிலருக்கு
வேலை கிடைக்கிறது
சிலருக்கு.
வாழ்க்கை இனிக்கிறது
ஒரு புறம்
வாழ்க்கை கசந்து வெறுப்பாகிறது
மறுபுறம்.
நாற்பதுகளில்
பொழுதுகள் புலர்கின்றன
நான்குகளுடன்
பொழுதுகள் அடைகின்றன
நாற்பதுகளுடன்.
- விஜயன் முல்லை, சித்தூர், பாலக்காடு மாவட்டம், கேரளா.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.