அட்டைகள்

எலக்ஷன் ஐடி கார்டு
டிரைவிங் லைசன்ஸ்
பாஸ்போர்ட்
ரேஷன் கார்டு
பேங்க் பாஸ் புக்
பான் கார்டு
டெபிட் கார்டுகள்
கிரடிட் கார்டுகள்
நூலக ஐ.டி கார்டுகள்
வணிக நிறுவனங்கள் தரும் கார்டுகள்
விசிட்டிங் கார்டுகள்
பணியிட அடையாள அட்டை
... ... ... ... ...
இப்படி
கார்டுகளால்
ஒரு வாழ்க்கை.
இன்றைகெல்லாம்
காசில்லா விட்டாலும்
கார்டுகள் உண்டு
ஏராளம்
ஒருவர்
அவர்தானா
என்பதைச் சோதித்து
அறிய
அவர் வேண்டாம்
அவரது
அடையாள அட்டை போதும்.
சில அட்டைகளால்
பெருமை
சில அட்டைகளால்
சிறுமை.
அட்டைகளையும் - அதன்
எண்களையும்
மனனம் செய்வதினும்
எளிது
பட்டப் படிப்பிலும்
போட்டித் தேர்வில்
வென்று விடுவது
காதல் இல்லாத
இளைஞர் உண்டு
கார்டுகள் இல்லாத
இளைஞர் இல்லை
மரணத்திற்குப் பின்னும்
பலருக்கு
மிச்சமிருப்பது
கார்டுகள் மட்டுமே
இன்று பிறந்த
குழந்தை முதல்
அனைவருக்கும் உண்டு
அடையாள அட்டைகள்
விலங்குகளுக்கும் உள்ளன
அடையாள அட்டை
வீட்டு விலங்குகளுக்கு மட்டுமல்ல
காட்டு விலங்குகளுக்கும்
கூண்டு விலங்குகளுக்கும்
இனி
வீட்டு உபயோகப் பொருட்களுக்கும்
அவசியமாகுமோ
அட்டைகள் ?
கார்டுகள் வைப்பதற்கென்றே
கையில்
கருதவேண்டியுள்ளது
ஒரு பை.
ஆப்பிரிக்க அட்டைகள்
பல்கிப் பெருகுவது போல
பெருகுகின்றன
அடையாள அட்டைகள்
அந்த அட்டைகளை
அடிக்கலாம்
அழிக்கலாம்
இந்த அட்டைகளை ?
சில அட்டைகள்
உடம்பில் ஒட்டிக்கொண்டு
நமக்குத் தெரியாமலேயே
உறிஞ்சுகின்றன இரத்தத்தை.
இரத்தம் வழிந்து
அட்டையின் வயிறு நிரம்பி
உடம்பிலிருந்து விழுந்தப் பிறகுதான்
தெரிகிறது
அட்டை கடித்த உண்மை.
அடையாள அட்டைகளாலும்
இத்தகைய அனுபவம் கிடைக்கலாம்.
அட்டைகளாலும் அல்லல்கள்
ஆம்! அவ்வப்போது
இப்போது சில அட்டைகளை
வளைக்கலாம்
நெளிக்கலாம்.
அனைத்திற்கும் பதிலாக
ஒரே ஒரு அட்டை
பன்முகப் பயன்பாட்டிற்கும்
உதவலாம்.
வேறு எதற்குப் பயன்படும்?
அட்டைகளால் வரையப்படுகிறது
இந்தியரின்
வாழ்க்கை ஓவியம்.
- விஜயன் முல்லை, சித்தூர், பாலக்காடு மாவட்டம், கேரளா.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.