தாய்மை
புதுமணப்பெண் என ஊர் சொல்லும்
வாழ்த்தின் புன்னகை காயும் முன்
விசேஷம் ஏதும் உண்டா?
என்ற கேள்வி
என் அடிவயிற்றில்
நெருப்பினால் சுரங்கப்பாதை அமைத்து
துழாவிச் சென்று
என் இன்பங்களைத்
திருடும் போது
சுண்டி இழுக்கும் வலியை விட
சாகும் வலி எனக்குப் பெரியதில்லை
மகளே...
மகப்பேறு மருத்துவமனைகளும்
பணத்திற்குப்
பிரசவம் பார்த்தனவே தவிர,
எனது பிரசவத்திற்கு
நாள் குறித்து
கைகுலுக்கவில்லை
மலடு என்ற எனது பட்டத்தை
வாய் சொல்லவில்லையென்றாலும்
மௌனங்கள் கிசுகிசுத்ததால்
என் ரகசியத் தாய்மையின் கண்ணீர்
ஏச்சுக்களைச் சுமந்தது
குழந்தைகளைப் பெற்றெடுத்தா
தெரசா, அன்னை தெரசாவானார்?
அனாதை ஆசிரம வாசலில் பூத்திருக்கும்
சிறு பூவைக் கிள்ளிக் கொண்டு
நான் உள்ளே நடந்தது
உனக்கொரு அம்மா கிடைக்கவும்
எனக்கொரு பிள்ளை கிடைக்கவும் தான்
தொப்புள் கொடி அறுத்து வந்த
குருதியின் கதறலுடன்
உன்னை ஆசிரமத்தின் குப்பைமேட்டில்
போட்டுவிட்டுப் போனவளுக்குத் தெரிந்தால்
என் மீது பொறாமை கொள்வாள்
ஏனென்றால் இப்போது
உனது குட்டி அன்புக் கரங்களின்
குளிரவைக்கும் சூட்டில்
நான் பிள்ளையாய் விதைகிறேன்
நீ தாயாய் விளைகிறாய்!!!
- செ. நாகநந்தினி, பெரியகுளம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.