வாய் வார்த்தைகள்

கெட்ட வார்த்தைகள்
சொல்லவில்லை
ஆயினும்
கோபம் கொள்கிறார்கள்
கொலை செய்யும் அளவுக்கு!
வெங்காயம்
வெண்ணெய்
விளக்கெண்ணெய்
முண்டம்
மயிரே
சோமாரி
முடிச்சவிக்கி
புண்ணாக்கு
நாசம்
நாசமத்துப் போக… … …
பெரிய பருப்பா
என்று திட்டினால்
இப்போது
பெருமையாக இருக்கிறது
விலை உயர்ந்த
பொருளல்லவா அது?
சின்னப் பருப்பு என்றாலும்
மகிழந்து போகலாம்
மாறாக
சினந்து போகிறார் பலர்
ஏன் இந்த
எதிர் பரிமாணம்?
பிறரைத் திட்டுவதற்காக
உடல் உறுப்புகளின்
பெயரைச் சொல்கிறார்கள்
கோபப்படும் போது
உரத்த குரலில் –
மருத்துவரிடம் சொல்ல ஆசிக்கிறார்கள்
காதில்
மெல்லிய குரலில்.
ஓர் உறுப்பின் பெயரை
வேறு எப்படிச் சொல்வதோ?
என்பது சிலரது வினா
அதற்கும் சினக்கிறார்கள்
சிரிக்கிறார்கள்
பிணக்கம் கொள்கிறார்கள்
எதற்கும் சினக்கிறார்கள்
சிரிக்கிறார்கள்
அவற்றைப் பிறமொழியில்
சொன்னாலோ
பாதிப்பு இல்லை
தயக்கமும் இல்லை
கூச்சமும் இல்லை
எளிமையாகிப் போகின்றன.
சில போது
அவை
நற்சொற்களாகின்றன,
நாசூக்காக
இடக்கரடக்கல் போலத்
தோன்றுகின்றன.
சிலர்க்குச் சிலபோழ்து
அமங்கலமாக
மங்கலமாக…
சில நேரங்களில்
நாற்றம்
கணவன் மனைவியும்
தற்காலக் காதலரும் கூட
சொல்வதற்குத் தயங்குபவை
ஏனெனில்
வார்த்தைகள்
வலிமையானவை
வெறும் வார்த்தைகள்தாம்!
ஆனாலும் சில
சமூகத்தைச் சிதைக்கின்றன
சில
வாழ்வை வசந்தமாக்குகின்றன
நாடுகளையே நாசப்படுத்துகின்றன
சில
நாடுகளிடையில் நட்பை வளர்க்கின்றன
சில
தூக்கத்தைக் கெடுக்கின்றன
சில
துக்கத்தைப் போக்குகின்றன
சில
தற்கொலைக்கும் தூண்டுகின்றன
சில
நற்கலைக்குள் செலுத்துகின்றன
குடும்பத்தைக் கலைக்கின்றன
சில
குடும்பத்தை உருவாக்குகின்றன
இன்னும்
விவாகரத்திற்கு வித்திடுகின்றன
சில
விவேகத்திற்கு சத்திடுகின்றன
சில
… … … … …
சில
… … … … …
ஆனால்
வார்த்தைகள் பல
நன்மை தருவன
அதைச் சொல்வோர்
எண்ணிக்கையோ
சில
சிற்சில
சிலசில
சிலச்சில
பல
பற்பல
பலபல
பலப்பல.
ஏனெனில்
வார்த்தைகள்
வலிமையானவை.
- விஜயன் முல்லை, சித்தூர், பாலக்காடு மாவட்டம், கேரளா.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.