போற்றுவோம்...! போற்றுவோம்...!
ஆயுதம் போற்றுவோம்
உயிர்களை வதைப்பதற்காக அல்ல
விவசாயம் பெருக்க
தொழிலை வளர்க்க
வாழ்க்கை செழிக்க…
*****
கல்வி போற்றுவோம்
கருப்புப் பணம் செய்வதற்கு அல்ல
அறிவு மேம்பட
பன்முகத் திறன் வளர்க்க
பகுத்தறிவு மலர…
*****
உழைப்பைப் போற்றுவோம்
பணம் செய்வதற்கு அல்ல
உடற்பயிற்சி சிறக்க
உள்ளம் மகிழ
ஊதியம் உயர
*****
இறைவனைப் போற்றுவோம்
பிரிவினை வளர்க்க அல்ல
மனிதரை மதிக்க
மனிதம் செழிக்க
வருங்காலம் வசந்தமாக
*****
நாடு போற்றுவோம்
வளங்களைச் சுருட்ட அல்ல
அனைவரும் வளர
அன்பு மலர
இயற்கை இனிக்க
இன்பம் சிறக்க
*****
பண்பாடு போற்றுவோம்
திருமண பந்தம் முறிவதற்கு அல்ல
இதயங்கள் ஒன்றுபட
இல்லறம் நல்லறமாக
குழந்தைகள் குதூகலம் பெற
*****
அறம் போற்றுவோம்
வன்முறை ஓங்குவதற்கு அல்ல
விருந்தோம்பல் விருத்தியுற
கூட்டுக்குடும்பம் எழுச்சி பெற
நட்பு நாகரிகம் நனிசிறக்க
நாடெல்லாம் நன்மையுற
*****
காதல் போற்றுவோம்
காமம் தீர்வதற்கு அல்ல
கனவு மெய்ப்பட
சாதி மத பேதம் அகல
வரதட்சிணை வன்கொடுமை தீர
*****
பெண்மை போற்றுவோம்
இச்சை தீர்ப்பதற்கு அல்ல
சிந்தனை சீர்பெற
சமுதாயம் நலம் பெற
நாடும் வீடும் சிறக்க
உலகம் உய்ய
*****
விளையாட்டு போற்றுவோம்
சூதாட்டம் சுபிட்சம் பெற அல்ல
வீரத்தைப் பறைசாற்ற
ஒருமைப்பாடு ஓங்க
வெற்றி தோல்வியை ஏற்க
வெறுப்பினைப் போக்க
உடல் உரம் காக்க
தாய்நாட்டின் புகழ் பரப்ப
*****
மானுடம் போற்றுவோம்
தனிமனிதர் இன்புறுவதற்கு அல்ல
விபத்துகளில் உதவிட
ஆபத்துகளில் அரவணைக்க
மாற்றுத் திறனாளிகள் மகிழ்வுற
மாற்றாரும் மகிழ்ச்சி பெற
உலகம் மேம்பட
உண்மை உயர்வு பெற
- விஜயன் முல்லை, சித்தூர், பாலக்காடு மாவட்டம், கேரளா.
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.