இதற்கு மேல் எப்படி...?
வைகறையில்
நான்கரை மணி எழுப்பொலி கேட்டெழுந்து,
சமையலுக்குச் சகாயித்து,
தேநீர் வைத்துக் கொடுத்து,
பாத்திரங்கள் கழுவி,
வெந்நீர் வைத்துக் கொடுத்து,
மதிய உணவைப் பாத்திரங்களில் அடைத்து,
தலைவியைப் பேருந்து நிலையத்தில் விட்டுவந்து
குழந்தையை முயன்று எழுப்பி,
உண்பித்து,
இணையவழி வகுப்பிற்குத் தயார்படுத்தி,
உண்டு,
சிறிதுநேரம் செய்தித் தாளில் கண்ணோக்கி
சற்றதிகம் சமூக ஊடகங்களில் ஊடுருவி,
மீதமுள்ள பாத்திரங்களைக் கழுவி
வீடு பெருக்கி
தலைவியைத் திரும்ப அழைத்துவந்து
துணி துவைக்க உதவி
வீடு துடைக்க உதவி
மீண்டும் சமைக்கச் சகாயித்து
கடைக்குச் சென்று
மளிகைப் பொருட்கள், காய்கறிகள்
பால்…….
வாங்கி வந்து
இருபத்து நான்கு மணிநேரமும் போதாமல்
அடுத்த நாளிடமிருந்து
சிறுபொழுதைக் கடன்வாங்கும் சூழலில்
பத்து நாட்கள் அல்ல
நூறு நாட்கள் விடுப்பெடுத்து
வீட்டிலிருந்தாலும்
இதற்குமேல்
எதை
எப்படிச் சாதிப்பது...?
- விஜயன் முல்லை, சித்தூர், பாலக்காடு மாவட்டம், கேரளா.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.