காடு
நல்லது எது? கெட்டது எது?
என்ற அறியாமை புத்தியுள்ள
அதிசயம் தான் காடு
அது அபூர்வத்தின் அன்பே
சூரிய ஒளியாய் தனக்குள்
ஊடுருவ விட்டிருந்தது...
விலங்குகளின் உமிழ்நீரை
குடிநீராகச் சுவைத்திருந்தது
பறவைகளின் சிறகசைப்பை
மூச்சுக் காற்றாய் சுவாசித்திருந்தது
பூச்சிகளின் உரசல்களை
ஆடையாய் அணிந்திருந்தது
நதியென்ற ஆனந்தக் கண்ணீரை
மட்டுமே வடித்திருந்தது
பாரபட்சம் காட்டத் தெரியாத
பேதை காடு அழிக்கப்பட்டு
கட்டிடங்கள் கட்டப்பட்டு விட்டது
இருந்தும் காடு விம்மி விம்மி
வாழ்ந்து கொண்டிருக்கிறது
மனிதர்களின் மூச்சுத்திணறலாய்
- செ. நாகநந்தினி, பெரியகுளம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.