தண்டனை

அடிப்பதாக மட்டுமே
அதட்டினார் அப்பா
குறும்பு செய்யும்,
சொன்னபடி கேட்காத
குழந்தையிடம்.
அடுத்த நிமிடம்
தன்னைத் தான்
வருத்தி,
தரையில் புரண்டு
உருண்டு – தன்
தன் தந்தைக்குத் துன்பம் தந்தது
குழந்தை.!
பொய் சொன்னால்
தண்டிப்பதாகச் சொன்னாள்
தாய்
தாய் தன்னைத் தண்டித்ததாய்
தந்தையிடம்
புகார் செய்தது
குழந்தை.
யாரை அதிகமாய்ப் பிடிக்கும்?
இது வினா
அப்பாவும் அம்மாவும்!
என்றது குழந்தை
மூன்றரை வயதில்
குழந்தையின்
அறிவை எண்ணிப்
பெருமை கொண்டனர்
பெற்றோர்.
நான்கரை வயதிலோ
அப்பா அடித்தால்
திட்டினால்
அவரிடம்
‘டூ’
சொல்லித் தாயைப் பிடிக்கும்
என்கிற குழந்தை.
தாய்
தண்டித்தால்
மறுதலையாகவும்
செப்பி மார்தட்டுகிறது.
ஓர் அடி
அடித்தால்
ஒன்பது அடி
திருப்பி அடிக்கிறது
குழந்தை
சுள் சுள்ளென வலிக்குமாறு.
பெற்றோர் அடித்தாலோ
அழுது
ஆர்ப்பாட்டம் செய்கிறது
அரைமணி நேரம்.
திட்டுகிற சொல்லாலேயே
திருப்பித் திட்டுகிறது.
சொல்லாத சொல்லாலும்
சொல்லி ஏசுகிறது.
கத்திக் கத்தியே
ஆவி போய்விடுமோ என
அல்லல் படுகிறாள்
அன்னையும்! பாட்டியும்
குழந்தையின்
பண்பு உணராது.
குழந்தை உளவியல்
கற்றவர் அன்னை!
நான்கு பிள்ளைகளைப் பெற்று
நலமாய் வளர்த்து
பேரன் பேத்திகளைக் கண்டவர் பாட்டி.
அமைதியாக அமர்ந்திருந்தால்?
என்ன குழந்தை இது
இருந்த இடத்தில்
பொம்மைபோல் இருக்கிறதே
மங்குணியாய்க் கிடக்கிறதே
என்று வருந்தும்
பெற்றோர்
உற்றார்.
குழந்தைக்குரிய
இயல்பைக் காட்டினால்
குற்றம் சொல்கிறார்.
எப்போதும்
துறுதுறுவென இருப்பதாய்
பெருமிதம் கொள்கிறார்.
அரை ஜதை
உடன் பிறப்புகளுடன்
பிறந்த ஒருவருக்கு
ஒரு குழந்தையே
பாரமாகிவிடுகிறதோ?
தமது
கோபம்
வலிமை
கருணை
காதல்
அன்பு
பண்பு
அறிவு
அறிவின்மை
குழந்தைத் தன்மை
பக்தி
சக்தி
பெரியோர் இயல்பு
உயர்ந்தோர் பண்பு
அத்தனையும்
அவதரிப்பிக்கும்
ஓர் உயிரியாக
உயிராக
உயிருக்கு உயிராக
இருக்கிறது குழந்தை.
குழந்தை
இல்லாமலிருப்பது கூட
சில போது
பல நேரம்
நன்றென்று தோன்றுகிறது
தற்காலப் பெற்றோருக்கு
மணமாகும் முன்பே
குழந்தை வளர்ப்பினை எண்ணி
வருந்துவோர் சிலர்
குழந்தையைப் பேணுவதைக்
கருதியே
திருமணம் செய்யாதோரும்
உண்டு
திருமணம் தேவையில்லை
குழந்தைச் சுகம் வேண்டும் என
ஏங்குவோர் எண்ணிக்கையும்
ஏறுகிறது.
ஏறுகிறது!
குழந்தையின்மையைப்
பணமாக்கும்
நிறுவனங்களின் எண்ணிக்கையும்
குழந்தையின்மை
ஒரு பாவமன்று
சமூகத் தீமையும் அன்று
ஒரு குறைபாடு
ஒரு நோய்
அவ்வப்போது வரும்
காய்ச்சல் போல
தலைவலி,
வயிற்றுவலி போல
மருந்து உண்டால்
மாறுவது நிச்சயம்
மாற்றுவது இச்செகம்
பழமைவாதிகள்
பரம்பரைச் சமூகம்
பார்ப்பது போல
பார்ப்பது தவறு
குழந்தையில்லாதோர்
தம் குற்றம் கொண்டு
நடப்பதும் தவறு
பிறர் சொற்கேட்டு
சினப்பதும் தவறு
எவர் வினா கேட்டும்
எதிர்ப்பதும் தவறு
காலம் கனியும்வரை
கடவுள் தணியும்வரை
காத்திருக்கலாம் –எதிர்
பார்த்திருக்கலாம்
கவலையின்றி மனம்
பூத்திருக்கலாம்
புதுமை சேர்த்திருக்கலாம்
பணியில் பதிந்திருக்கலாம்-புதுப்
பார்வை
பார்த்திருக்கலாம்.
ஆதரவற்ற குழந்தைகளைத்
தத்தெடுக்கலாம்
அதிலும்
மாற்றுத் திறன்கொண்ட
குழந்தைகளை விரும்பி எடுக்கலாம்
மனம் மலரும்
மலர் வளரும்
மறுப்பதற்கில்லை
நலம் வளரும்
தாமதமாய்ப் பூக்கும் கனி
பெரிதாய் இருக்கும்
சிறப்பாக
தித்திப்பாக
இனிப்பாக
இதயத் துடிப்பாக
பெருமையாக
அருமையாக
அமைந்துவிடும்-இன்பம்
அள்ளித் தந்துவிடும்
குழந்தைக்காக
கடமையை
பணியை
விட்டுக் கொடுக்கும் விருப்பமில்லை
சிலருக்கு
விரும்பவில்லை சிலர்.
வேலைக்காக
சுயநலனுக்காக
குழந்தையை
குடும்பத்தை
விட்டுக் கொடுக்க சிலர்
குழந்தையால்
வேலையில்
வேகம் குறையலாம்
வேலையால்
குழந்தையைப் பேணும்
பண்பு குறையலாமா?
- விஜயன் முல்லை, சித்தூர், பாலக்காடு மாவட்டம், கேரளா.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.