தஞ்சம்
ஆத்மார்த்த அன்பைப் பிழிந்து
அனுதினம் பருகத்தந்தாய்
புதிய பார்வைத்தனில்
காரிருள் மறையவைத்தாய்
முகம் வாடிப்போனால்
உன் மூச்சுக்காற்று
கேள்விக் கேட்கும்
குரல் மாறிப்போனால்
உன் பூமனம் மகிழ வைக்கும்
உடல் சோர்ந்து நடை தளர்ந்தால்
என் கைவிரலைப் பற்றிடுவாய்
மனம் மகிழ்ந்து நான் சிரித்தால்
உச்சிமுகந்து அணைத்திடுவாய்
சித்தம் தந்த பூவிதழோ!
மௌனித்தால் முறைக்கும்
சினம் வந்த செவ்விதழோ!
மௌனத்தில் அனல்தெறிக்கும்
தாமதமாய்ப் பதில் வந்தால்
உள்ளுணர்வோடு சூழ்ந்திடுவாய்
தயங்கி நான் நின்றால்
தன்னம்பிக்கை நீ தருவாய்
தொலைதூர பயணத்தில்
நிழலாய்த் துணை வருவாய்
பிடிவாதம் நான் கொண்டால்
கல்நெஞ்சாய்க் கனத்திடுவாய்
ஒளிவுமறைவு இன்றி
உள்ளதை உரைத்தாய்
நீயின்றி நானில்லையென
சொல்லாமல் உணரவைத்தாய்
நான் யாரென்று அறியாமல்
உளமாற உன்னைத் தந்தாய்
இன்னொரு தாயாய் என்
இதயத்தில் குடிப்புகுந்தாய்
தூயவனே உன் நினைவின்றி
தூங்காது உள்நெஞ்சம்
என் இதயம் என்றென்றும்
உன்னுள் தஞ்சம்
- சரவிபி ரோசிசந்திரா, சென்னை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.