மரணித்து விட்டேன்...!

உன் புகைப்படத்தை
ஓராயிரம் முறை
பார்த்து இருப்பேன்
ஏனோ! நீ இன்னும்
பார்க்கவில்லை
என் குறுஞ்செய்தியை...
காத்திருந்தால் காதல் அதிகரிக்கும்
என்று நானும் கூட,
சிலாய்த்துப் பேசியது உண்டு
என் தோழியின் காதலுக்கு
தூது போன நாட்களில்...
தலைவலியும் வயிற்றுவலியும்
தனக்கு வந்தால் தெரியுமென
அப்போது தெரியாமல் போனது...
ஏனோ! நீ...
இவ்வளவு இறுக்கமாய் இருக்கிறாய்
இம்மியளவும் மாறாமல்
உன்னை நினைத்து
உண்ணவும் முடியாமல் உறங்கவும் இயலாமல்
விழித்துக் கொண்டு இருக்கிறேன்
கோட்டானாய் நள்ளிரவில்...
நீ புரிந்து கொண்டது இவ்வளவு தானா?
என நினைத்தால்
நெஞ்சம் பஞ்சாய் வெடிக்கிறது...
என்ன செய்ய நீயும்
கொள்கையின் வாரிசு தானே!
உன் கொள்கையை காதல்
களவாடுமென நினைத்தேன்
மாறாக,
கொள்கை களவாடியது காதலை...
எல்லாவற்றிலும் நீ
முழுமை காண விரும்புகிறாய்....
நான்
உன்னை மட்டுமேக் காண விரும்புகிறேன்
உணர்வுகள் சேர்த்து வைக்கும் உறவை...
என்று நானும் நம்பினேன்...
என் நம்பிக்கைக்குப் பரிசளித்தது
உறவல்ல... பிரிவு...!
என் நினைவுகள்
ஒரு நொடி பேசியிருந்தாலும்
நீ அழைத்திருப்பாய் உரிமையுடன்
இன்று என் பிறந்தநாள்
நீ மறந்து விட்டாய்
நான் மரணித்து விட்டேன்...
- சரவிபி ரோசிசந்திரா, சென்னை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.