இரவின் ஓவியம்

ஓர் இரவை
எவ்வாறு ஓவியமாக்குவது.
பகலை வரைவது போல
அவ்வளவு எளிதன்று
இரவை வரைதல்
உள்ஓவியம் தீட்டப்பட்ட பால்நிலா
மின்மினி போன்ற விண்மீன்கள்
கடல் பாதத்தைத் தழுவியுள்ள மலைகள்
செந்நிறம் தீட்டப்பட்ட வானம்
செவ்வாடை சூடிய பூக்கள்
கருநிறம் போர்த்திய பறவைகள்
இப்படி பல பல...
ஆழமாகச் சென்றால்
இன்னும் பல மறைவான விழுதுகள்
ஒவ்வொன்றாய் தோன்றும்.
இது போதுமானது
உலகிற்கு பொதுவானதும் கூட.
மதுஅருந்தி சாலையோரம்
விழுந்து கிடக்கும் குடிமகன்கள்
நட்சத்திர ஓட்டல்களில் கூத்தாடிவிட்டு
நள்ளிரவிலும் அதிகாலையிலும்
வாகனத்தை இயக்கும் மங்கைகள்
அபாயகரமாக வாகனத்தை
ஓட்டும் வாலிபர்கள்
தேநீர், சுக்குகாபி, மசால்பொரி என
விற்பனையில் கருத்தாக இருக்கும்
உழைப்பாளிகள்
சுறுசுறுப்பாக வேலையில் ஈடுபடும்
தேனீரக வேலையாட்கள்
அலங்கரித்துக் கொண்டு
சாலையோரம் வசீகரித்து நிற்கும்
மாதர்கள், மூன்றாம் பாலினத்தார்
நெடுஞ்சாலைகளில்
வானூர்தி செலுத்தி விளையாடும்
பேருந்து ஓட்டுநர்கள்
நடைபாதைகளிலும்,
சாலையோரக் கடைத் திண்ணைகளிலும்
இரவைப் போக்கும் தெருக்கோடிகள்.
தங்கள் குழந்தைகளுக்காகவும்
பெண்களுக்காகவும்
தூங்காமல் காவல் இருக்கும்
வீடற்றோர்கள்...
பேருந்து நிலையத்தில்
நீண்டநேரம் காத்திருக்கும் பயணிகள்
படுத்திருக்கும் யாசகர்கள்...
தனியாக வரும் பைக்குகளையும் கார்களையும்
வழிப்பறி செய்யக்
காத்திருக்கும் திருடர்கள்...
வீடுகளில் திருடுவதற்குத் தருணம்
பார்த்திருக்கும் வாலிபர்கள்...
சட்டம் ஒழுங்கைக் காப்பாற்ற
தவமிருக்கும் காவலர்கள்...
காக்கியில் கொள்ளை செய்யும்
சில கனவான்கள்...
சீட்டி அடித்து வலம் வரும்
கூர்காக்கள்...
இரவுக்காட்சி பார்த்துவிட்டு
கள் குடித்தும்
வாகனங்களில்
பந்தயம் செலுத்தும் வாலிபர்கள்...
தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில்
பணியாற்றி விட்டு
வீடு திரும்பும்
யுவன்கள் யுவதிகள்...
இன்னும் இப்படி இப்படி…
இரவை வரைவது
பகலை வரைவது போல
அத்தனை எளிதன்று...
இந்தியச் சூழலில்...!
- விஜயன் முல்லை, சித்தூர், பாலக்காடு மாவட்டம், கேரளா.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.