தாய்மாமன்
தாயோடு பிறந்தவன்
தாய்மாமன் ஆகிறான்!
தாங்கிடும் உள்ளன்பால்
தந்தையாகிப் போகிறான்!
தொட்டில் கட்டும் உரிமையினை
விட்டுக் கொடுக்காமல் காக்கிறான்!
பட்டித்தொட்டிப் புகழும் வண்ணம்
பவணு வாங்கிப் போடுகிறான்!
மடியமர்த்தி முடியிறக்கையிலே
மட்டிலா மகிழ்வு கொள்கிறான்!
காதுகுத்தக் கதறுகையில்
கனிவாய்த் தாங்கிப் பிடிக்கிறான்!
பண்டிகை நாட்கள் வருகையிலே
பலகாரத்தால் நிரப்புகிறான்!
கொடைவிழாக் காலங்களிலே
கொலு வைத்துப் பார்க்கிறான்!
பருவம் வந்து அமருகையில்
பகட்டாய் சீர் செய்கிறான்!
பட்டாடை உடுத்துவித்து
பரவசமும் கொள்கிறான்!
உடன்பிறந்தாள் மகளையே
உசத்தியாகக் நினைக்கிறான்!
உயர்ந்து நிற்கும் தம் மகனுக்கு
உரிமை கோரி நிற்கிறான்!
கட்டி வந்த மருமகளைக் கண்
கலங்க விடாமல் பார்க்கிறான்!
மூச்சு நிற்கும் வரையிலும் காத்து
முழு நிறைவு கொள்கிறான்!
தாய்மாமன் உறவினையே - தமிழன்
தெய்வமாக மதிக்கிறான்!
தாய் தந்த சொத்தாக - தமிழன்
கொண்டாடி மகிழ்கிறான்!
- அ. சுகந்தி அன்னத்தாய், சென்னை- 48.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.