ஆணவம்
வளையாத முதுகெலும்பின்
முட்களின் மேல்
எரியும் காடாக அமர்ந்து
காலாட்டிக் கெண்டிருப்பது ஆணவம்!
சர்வாதிகாரிகளுக்கு மட்டுமே
குடியுரிமை வழங்கும்
ஏகாதிபத்திய நாகரிகத் தொட்டிலாக
ஆணவம்!
அன்பையும் அறிவையும்
ஆணவம் தன் இலக்கண நூலில்
உயிராகவோ ஒற்றாகவோ சேர்த்துக்கொள்வதில்லை
அவ்விலக்கண நூலில்
அறிவுரையையும் அனுபவத்தையும்
அரைப்புள்ளியாகவோ
காற்புள்ளியாகவோக் கூட
வாழ விடுவதில்லை ஆணவம்!
மேட்டில் ஏறுகிறோமா
பள்ளத்தில் சரிகிறோமா
எதை மிதித்துப் பயணப்படுகிறோம்
என்ற கவலைகளின்றி
வானத்தை மட்டுமேப் பார்த்து நடக்கும்
விலங்கினமாக மனதிற்குள் உலவுகிறது
ஆணவம்!
- செ. நாகநந்தினி, பெரியகுளம்
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.