எத்தனைப் பிறப்பு எடுத்தாலும்...!
ராதையின் காதல் உள்ளம்
கண்ணனுக்குள் வாழுது...!
மீராவின் காதல் உள்ளம்
பக்தியில் சேருது...
கோதையின் காதல் உள்ளம்
மாலையில் இணைந்தது...!
சீதையின் காதல் உள்ளம்
பார்வையில் கலந்தது...
பேதையின் காதல் உள்ளம்
கண்ணனிடம் சேருமோ...?
கண்ணனைச் சேராமல்
மண்ணுக்குள் மறையுமோ...?
உணர்வினில் உயிரினில்
உறைந்த கண்ணனே!
உள்ளத்தில் எனக்கு
இடமளிக்க மறுப்பதேனோ!
கீதையின் நாயகனே
புல்லும் உன் புகழ் பாடுது...
உன் நினைவில் தானே
என் ஜீவன் வாழுது...!
பல யுகம் கடந்தாலும்
உன் தாரமாவேன்...!
உன் நாமம் உச்சரித்தே
என் ஜீவன் வளர்ப்பேன்...!
எத்தனைப் பிறப்பு எடுத்தாலும்
எந்தன் பதி நீயே...!
உன்னில் எப்போதும் கலந்திருக்கும்
என் ஜீவ நதியே...!
- சரவிபி ரோசிசந்திரா, சென்னை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.