கவிதை...படும்பாடு...!
தன்னைத் தானே புகழ்தல்
எந்நிலைக் கோட்பாடு
தற்பெருமையின் எச்சத்தில்
செழிக்காது தேசத்தின் பண்பாடு
தனக்கு எல்லாம் தெரியும்
என்பது செருக்கின் நிலைப்பாடு
தன்னிலை மறந்து புகழ் போதையில் மிதப்பது
அறியாமையின் உளப்பாடு
முகத்துதி பாடி முன்னேறுவதற்கு
ஏன் இந்தக் கூப்பாடு?
மூன்று வேளை உழைத்தால்
அனுதினம் உண்ணலாம்
அறுசுவைச் சாப்பாடு
உயிர் எழுத்துக்கு ஒருநாள் கிடைக்கும்
வாழ்வியல் கலைப்பாடு
உயரிய விருதில் தெள்ளத் தெளிவாய்த்
தெரிகிறது இனப்பாகுபாடு
தோல்வி எல்லாம் வெற்றி பெற வேண்டும்
மனஉறுதியின் செயல்பாடு
தாய்மொழித் தமிழில் என்றுமில்லை
கருத்தியல் தட்டுப்பாடு
யாகவா ராயினும் நாகாக்க வேண்டும்
மொழியியல் பயன்பாடு
வற்றாத நீருற்றாம் தாய்மொழியில்
அறம்பாடு
பாரத தேசத்தின் பழம் பெருமையைப்
போற்றிப் புகழ்பாடு
சங்கம் வைத்து தாய்மொழிக்
காத்த நம் முன்னோர்கள்
கவிப்பாடு
தீதும் நன்றும் பிறர்த் தர வாரா
மெய்யியல் வெளிப்பாடு
- சரவிபி ரோசிசந்திரா, சென்னை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.