கனவில் தோன்றிய கடவுள்!

நேற்று இரவு
கனத்த மனதுடன்
கட்டில் மேல் படுத்து
பாம்பைப் போல
புரண்டுக் கொண்டிருந்தேன்.
நீண்ட நேரமாகியும்
தூக்கம் வரவில்லை
ஏதேதோ சிந்தனைகள்
சிந்தனையோட்டம் வெகுநேரமாகியும்
நிற்கவில்லை - பிறகு கைபேசியில்
இரவு நேரப்பாடல்களைக்
கேட்டுக்கொண்டே தூங்கிவிட்டேன்.
மல்லிகைப் பூவின் மணத்தைத்
தூக்கத்திலேயே நுகர்கிறேன்
யாரோ என்னருகில்
அமருவது போல உணர்ந்தேன்
இருந்தாலும், எந்த உருவமும் -என்
மனக்கண்களுக்குத் தெரியவில்லை.
நல்ல தூக்கமென்பதால் - என்னால்
கண்விழிக்க முடியவில்லை
தூக்கத்திலிருந்து கொண்டே
யாரது..? என்று கேட்டேன்.
நான்தான் என்றது -ஒரு
மெல்லிய குரல்.
நான்தான் என்றால் - உனக்கு
ஊர் பெயர் எதுவும் கிடையாதா என்றேன்
தூங்குவதற்குச் சற்றுமுன்- நீதானே
என்னை அழைத்தாய் என்று
ஆச்சரியத்துடன் கேட்டது அந்தக் குரல்
உன்னை அழைப்பதற்கு - நீ
என்ன கடவுளா என்று கேட்டேன்.
அதிலென்ன ஐயம் உனக்கு?
நான்தான் கடவுள்
நானேதான் கடவுள் என்று
தன்னைக் கடவுள் என்று
மெய்பிப்பதற்காக என்னிடம்
போராடிக் கொண்டிருந்தது -அந்தக் குரல்.
நீண்ட நேர உரையாடலுக்குப் பிறகு
கனவில் என்னோடுப்
பேசிக் கொண்டிருக்கின்ற
அந்த உருவமற்ற குரலைக்
கடவுள்தான், கடவுளேதான் - என்று
முழுமையாக நம்பத்தொடங்கினேன்!
அந்தக் குரல் சற்று நேரம்
அமைதியாக இருந்துவிட்டு
வாழ்க்கையில் - நீ
துன்பப்படுமளவுக்கு எதுவும்
நடந்துவிடவில்லை என்றது
என்னால் அப்படியெல்லாம்
விட்டுவிட முடியாது என்றேன்
தயக்கத்துடன்.
நண்பர்களுடன் - நேற்று
நடந்த வாக்குவாதம்- என்
மனதை மிகவும்
புண்ணாக்கிவிட்டது என்றேன்.
அதை நான் நன்கு அறிவேன்
என்றது - அந்தக் குரல்
அப்படியென்றால் நேற்று - நீ
என் சார்பில் பேசியிருக்கலாமல்லவா?
அவர்களின்முன் தோன்றி
நான்தான் கடவுளென்று
சொல்லியிருக்கலாமே?
கடவுள் இல்லை என்றார்கள்
கடவுள்மீது நான் கொண்ட
பக்தியினை ஏளனப்படுத்தினார்கள் - நீ
அனைத்தையும் பார்த்துக் கொண்டு
சும்மா இருந்துவிட்டாய் இல்லையா?
என் மனம் இன்னும் வலிக்கின்றது தெரியுமா?
அது தெரிந்துதானே இன்று - நான்
உன் கனவில் தோன்றியிருக்கிறேன் - இனி
நான் சொல்வதை மட்டும்- நீ
கேட்டு அதற்கேற்ப நட என்றது -அந்த குரல்.
யாரிடமும் வாக்குவாதம் செய்யாதே
யாரையும் ஏளனப்படுத்தாதே
பிறருக்குத் துன்பம் கொடுக்காதே
மூடநம்பிக்கைக் கொள்ளாதே
நம்பியவர்களை ஏமாற்றாதே
எண்ணங்களைத் தூய்மைச் செய்
நற்செயல்களை நாளும் செய்
இளையோருக்குக் கல்வி புகட்டு
முதியோருக்குப் பாதுகாப்புக்கொடு
பசித்தோருக்கு உணவு கொடு
பினியுள்ளோருக்கு மருத்துவம் செய்
பிறர் வலிகளைத் தன் வலிபோல உணர்
உடனிருந்து ஆற்றுப்படுத்து - பிறகு பார்
நீதான் கடவுள், நீயேதான் கடவுள்.
உலகம் உன்னையும் - ஒருநாள்
கடவுளாகப் பார்க்குமென்று
சொல்லிவிட்டு - அந்தக் குரல்
மறைந்துப் போய்விட்டது.
அடுத்தநாள் காலையில் எழுந்தேன்
மனம் மகிழ்ச்சியிலிருந்தது
இந்த மகிழ்ச்சிக்கு என்ன காரணம்
எதுவும் புலப்படவில்லை
ஏதேதோ யோசித்தேன்
நேற்று இரவு
ஏதோ கனவு கண்டேனே..!
என்ன கனவு?...ம்..!
என்ன கனவு…? ம்…ஊகும்!
நினைவிற்கு வரவில்லையே
மறந்துபோய்விட்டதே. ம்..!
எவ்வளவு முயன்றும் - நேற்று இரவு
நான் கண்ட கனவு - என்
நினைவிற்கு வரவேயில்லை!
- முனைவர் கு. சிதம்பரம், சென்னை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.